திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயில், தை மாத பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவள்ளூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோயிலில், தை மாத பிரமோற்சவ விழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு விழா இன்று காலை 5 மணிக்கு மகர லக்னத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6.30 மணிக்கு தங்க சப்பரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7 மணிக்கு சிம்ம வாகனத்தில் உற்சவர் வீரராகவர் வீதியுலா வருகிறார்.
23ம் தேதி காலை கருட சேவையும், 24ம் தேதி தை அமாவாசை அன்று உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ரத்னாங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 27ம் தேதி காலை தேர் திருவிழாவும், 29ம் தேதி தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. ஏற்பாடுகளை, வீரராகவ சுவாமி கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சம்பத் தலைமையில் தேவஸ்தான ஊழியர்கள் செய்துள்ளனர்.