தூக்கத்தில் மனைவி உயிர் பிரிந்தது அதிர்ச்சியில் கணவனும் உயிரிழப்பு: சாவிலும் பிரியாத தம்பதி

சென்னை: தூக்கத்தில் மனைவி உயிர்பிரிந்த அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு கணவனும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை வண்ணாரப்பேட்டை, சஞ்சீவிராயன் கோயில் தெருவை சேர்ந்தவர் லோகநாராயணன் (65). இவர் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் பணியாற்றி ஓய்வுப்பெற்றவர். இவரது மனைவி ராஜேஸ்வரி (60). இவர்களது மகன், மகளுக்கு திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 14ம் தேதி நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரியை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். நேற்றுமுன்தினம் காலை காபி போடுவதற்காக ராஜேஸ்வரியை எழுப்பியபோது அவர் எழுந்திருக்காமல் அசைவற்று கிடந்ததால் அவர் இறந்துவிட்டது தெரிந்தது. இந்த அதிர்ச்சியில் லோகநாராயணனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கிவிழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

நேற்று காலை தம்பதியினர் வீட்டைவிட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்து வீட்டினர்  சென்று பார்த்தபோது இருவரும் இறந்துகிடப்பது தெரிந்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் அவர்களின் உறவினர்கள் விரைந்துவந்தனர். மகன் ஜெகதீசன் மற்றும் குடும்பத்தினர் வந்து கதறி அழுதனர். தண்டையார்பேட்டை போலீசார் சென்று தம்பதி சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : DEATH
× RELATED குமரி மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை