×

தமிழகம் போலியோ இல்லாத மாநிலம்: சொட்டு மருந்து முகாமை துவக்கி வைத்து முதல்வர் பேச்சு

சென்னை: தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்கள் மூலம் நேற்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் தமிழகம் போலியோ இல்லாத மாநிலம் என்று கூறினார். நாடு முழுவதும் போலியோவை ஒழிப்பதற்காக ஆண்டுதோறும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 2 தவணைகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. போலியோ ஒழிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் சேர்ந்துள்ளது. இதனால் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி,  நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி  மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என 43 ஆயிரத்து 51 மையங்களில்  போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
மேலும், பேருந்து நிலையங்கள், ரயில்  நிலையங்கள், விமான நிலையங்கள், சோதனைச் சாவடிகள் என 1,652 மையங்களும் இதற்காக அமைக்கப்பட்டிருந்தது.

தொலை தூரத்தில் உள்ள பகுதிகளில் வசிக்கும்  குழந்தைகளுக்காக ஆயிரம் நடமாடும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை தவிர  மேலும் 3 ஆயிரம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த முகாம்களில்  பொதுமக்கள் ஆர்வமாக முன்வந்து 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ  சொட்டு மருந்து போட்டு விட்டு சென்றனர். காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை இந்த முகாம் நடைபெற்றது. இந்த பணியில் சுகாதாரப் பணியாளர், அங்கன்வாடி பணியாளர், ஆசிரியர் மற்றும் தன்னார்வலர் என 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழகத்தில் சுமார் 71 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

குறித்த காலத்திலே வழங்கப்படுகின்ற காரணத்தினாலே, இன்றைக்கு தமிழகத்திலே 16 ஆண்டுகளாக போலியோ நோய் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறது. பூமியில் இருந்து இந்த போலியோ நோயை முற்றிலும் ஒழிக்க அனைவரும் கைகோர்த்து செயல்படுவோம் என உறுதியேற்போம். போலியோ நோய் குழந்தைகளுக்கு ஏற்பட்டுவிட்டால் அது வாழ்நாள் முழுவதும் அந்தக் குழந்தை கஷ்டப்பட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிடும். அரசாங்கம் இதற்கு ஒரு நல்ல ஏற்பாட்டை இன்றைக்கு செய்திருக்கின்றது. இந்த நல்ல ஏற்பாட்டை பெற்றோர் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், சுகாதார துறை செயலாளர் பீலா ராஜேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : state ,drip drug campaign ,CM ,Tamilnadu , Tamilnadu, polio-free, state drops management, inauguration, CM talk
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...