×

வீர விளையாட்டில் ‘ஈரம்’ வெளிப்பட்டது மஞ்சுவிரட்டில் தாய், குழந்தையை முட்டாமல் தாவிச்சென்ற காளை: சிராவயலில் சிலிர்க்க வைத்த காட்சி

திருப்புத்தூர்:  சிராவயல் மஞ்சுவிரட்டில் குறுக்கே வந்த பெண், குழந்தைகளை முட்டாமல் காளை தாவி சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே சிராவயல் மஞ்சுவிரட்டு, நேற்று முன்தினம் சிராவயல் பொட்டலில் கோலாகலமாக நடந்தது. இதில் 500க்கும் மேற்பட்ட காளைகள் ஆங்காங்கே கட்டுமாடுகளாக வயல் பகுதியில் அவிழ்த்து விடப்பட்டன. அப்போது காலை 10 மணியளவில் மஞ்சுவிரட்டை பார்க்க வந்த ஒரு பெண் தனது கைக்குழந்தையுடனும், ஒரு சிறுவனுடனும் பொட்டலில் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு சரக்கு வாகனத்தில் கட்டப்பட்டிருந்த காளை ஒன்று திடீரென ஆவேசமடைந்து, கயிற்றை அறுத்துக் கொண்டு அப்பெண் வந்த திசை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றது. இதை கண்ட பார்வையாளர்கள் பதைபதைத்து போயினர். மிகவும் வேகமாக, ஆக்ரோஷத்துடன் சென்ற காளை திடீரென பெண், குழந்தைகளை கண்டதும் சற்று வேகத்தை குறைத்தது. இதைக் கண்டு அஞ்சிய அப்பெண் குழந்தைகளுடன் தரையில் படுத்துக் கொள்ள, காளை அவர்களை முட்டாமல் கண் இமைக்கும் நேரத்தில் மான் போல் தாவிச் சென்றது. அதிர்ஷ்டவசமாக 3 பேருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. சிறிது நேர அதிர்ச்சிக்கு பிறகு பெண், குழந்தை, சிறுவனை அழைத்து சென்றார். இந்த நிகழ்வு அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சி கலந்த நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இந்த  சம்பவம் வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மணப்பாறையில்: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பொத்தமேட்டுப்பட்டி புனித அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 10 வீரர்கள் உள்பட 15 பேர் காயமடைந்தனர். வடமலாப்பூரில் 19 பேர் காயம்: புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசல் அருகே வடமலாப்பூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 889 காளைகள், 174 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில்  19 பேர் காயமடைந்தனர். புதுக்கோட்டையை சேர்ந்தவர் காளையை அடக்கினால் 3 பவுன் செயின் பரிசு என அறிவித்தார். ஆனால் யாராலும் அடக்க முடியவில்லை. வயல்வெளி கிணற்றில் தவறி விழுந்த காளையை தீயணைப்பு படையினர் மீட்டனர். உடைந்த தடுப்பு வழியாக ஓடிய காளை இடித்து தள்ளியதில் 6 வயது சிறுமி காயம் அடைந்தார்.

சேலத்தில் ஜல்லிக்கட்டு: சேலத்தில் பிரசித்தி பெற்ற ஆத்தூர் கூலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 9 மாவட்டங்களில் இருந்து 600 காளைகள் பங்கேற்றன. மாடுகள் முட்டியதில் 20க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது. தடைமீறி வங்கா நரி ஜல்லிக்கட்டு: வாழப்பாடி அருகே சின்னம்மநாயக்கன்பாளையத்தில் நேற்று உருமி மேள தாளத்துடன் பொதுமக்கள் விமரிசையாக வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தினர். இதற்காக 20க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள வனப்பகுதிக்கு சென்று  நள்ளிரவில் வலையில் சிக்கிய வங்கா நரியை கொண்டு வந்து, நேற்று காலை 2 கிமீ தூரம் ஊரை சுற்றி வந்தனர். அதற்கு பெண்கள் ஆரத்தி எடுத்தனர். பின்னர் வங்கா நரி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினர். அவர்களில்  11 ேபர் மீது  வனத்துறையினர் வழக்கு பதிவு செய்து  ₹55 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

காளை முட்டி மேலும் 2 பேர் சாவு
மதுரை ஐயர் பங்களா, உச்சபரம்புமேடு பகுதியைச் சேர்ந்த அழகர் (21). கடந்த 15ம் தேதி, மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக வந்திருந்தார். அப்போது காளை முட்டியதில் படுகாயமடைந்தார். மேல் சிகிச்சைக்காக இவர், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அழகர் நேற்று இறந்தார். புதுக்கோட்டை மாவட்டம் வடமலாப்பூரில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 19 பேர் காயமடைந்தனர்.

இவர்களில் ராஜாவயலை சேர்ந்த வடிவேல் என்கிற பார்வையாளர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் இறந்தார். ஏற்கனவே ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளை முட்டி 4 பேர் இறந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, மேலும் 2 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

Tags : infant ,Baby , mother , baby ,e yellow-footed bull:
× RELATED ஜெய், யோகி பாபு இணையும் பேபி அன்ட் பேபி