×
Saravana Stores

பிஸ்கட், சாக்லேட், சிப்ஸ், சோப் உள்ளிட்ட நுகர்பொருட்கள் விலை உயரும் அபாயம்: பண வீக்கத்தால் திணறும் நிறுவனங்கள்

புதுடெல்லி: பிஸ்கட், சிப்ஸ், சாக்லேட் உள்ளிட்ட நுகர்பொருட்களின் விலையை விரைவில் உயர்த்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இல்லாவிட்டால், விலையை கூட்டாமல் அதற்கேற்ப எடையை குறைக்கவும் முடிவு செய்துள்ளன. உணவு பொருட்களின் விலை கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வால் பண வீக்கம் கடந்த டிசம்பரில் 7.35 சதவீதத்தை எட்டியுள்ளது. உணவு பொருட்களுக்கான பண வீக்க விகிதம் 14.12 சதவீதமாக உயர்ந்துள்ளது. வேளாண் விளை பொருட்களான பால், சர்க்கரை, கோதுமை, பாமாயில், உருளைக்கிழங்கு விலை அதிகரித்துள்ளது. இதுகுறித்து நுகர்வோர் பொருட்கள் தயாரிக்கும் நிறுவன வட்டாரத்தில் கூறியதாவது: பால், சர்க்கரை உள்ளிட்ட வேளாண் விளைபொருட்களின் விலை சமீப காலமாக அதிகரித்து வந்துள்ளது. இதனால் பிஸ்கட், சாக்லேட், சிப்ஸ் போன்றவை தயாரிப்பதற்கு கூடுதல் செலவாகிறது.

முக்கிய மூலப்பொருட்கள் என்பதால் இவற்றின் விலை உயர்வை நீண்ட காலத்துக்கு நிறுவனங்களால் ஏற்க முடியாது. எனவே, விலையை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை. குழந்தைகளுக்கான உணவு பொருள் தயாரிப்பிலும் பால், சர்க்கரை, கோதுமை முக்கிய தேவையாக உள்ளது. எனவே, குழந்தைகள் சார்ந்த பிஸ்கட் மற்றும் பால் பொருட்கள் விலையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் உள்ளது. இதுபோல், சோப் உற்பத்திக்கு பாமாயில் முக்கிய மூலப்பொருளாக உள்ளது. எனவே, சோப் விலையும் உயர வாய்ப்புகள் உள்ளன. சர்க்கரை விலை உயர்வால், குளிர்பானங்கள் விலையும் அதிகரிக்கலாம். சில பால் பொருட்களின் விலை 20 சதவீதம் வரையிலும், பிஸ்கட், சாக்லேட் விலை 5 முதல் 10 சதவீதம் வரையிலும் உயர்த்தப்படலாம் என்றனர்.

* எடையை குறைக்க திட்டம்
பொருளாதார மந்தநிலை காரணமாக தொழில்துறைகள் முடங்கியுள்ளன. ஏராளமானோர் வேலை இழந்துள்ளனர். மக்களிடையே வாங்கும் சக்தியும் வெகுவாக குறைந்து விட்டது. ஷாம்பு, நொறுக்கு தீனிகள் உட்பட குறைந்த எடையில் ஒரு ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உள்ள பொருட்கள்தான் பெரும்பாலும் விற்பனையாகின்றன என வியாபாரிகள் கூறுகின்றனர். எனவே, அதிகம் விற்பனையாகக்கூடிய நுகர்பொருட்களின் விலையை உயர்த்துவது, விற்பனையை மேலும் பாதிக்கலாம் என சில நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, விலையை உயர்த்துவதற்கு பதில், பொருட்களின் எடையை 3 கிராம் முதல் 8 கிராம் வரை குறைத்தால் தற்போது உள்ள விலையிலேயே விற்க முடியும். இது விற்பனையில் சரிவு ஏற்படுவதை தடுக்க உதவும் என கருதுவதாக சில நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. சோதனைரீதியாக இது ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

* பால், சர்க்கரை, கோதுமை, பாமாயில், உருளைக்கிழங்கு, பாமாயில் விலை அதிகரித்துள்ளது.
*  பிஸ்கட், சாக்லேட், பால் பொருட்கள், குழந்தைகளுக்கான தயாரிப்புகள், சாக்லேட் போன்றவற்றுக்கு இவை முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன.
* இதனால் இன்னும் ஒரு சில மாதங்கள், நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நெருக்கடி காலக்கட்டமாக அமையலாம் என கருதப்படுகிறது.
* குளிர்பானங்கள் விலையும் உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பால் பொருட்கள் விலை 20 சதவீதம் வரையிலும், பிஸ்கட், சாக்லேட் போன்றவை 10 சதவீதம் வரையும் உயரலாம் என சில நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது.

Tags : Biscuits, candy, chips, soap, consumer goods prices, rising, companies
× RELATED நவ.10: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34க்கு விற்பனை!