×

சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொலையில் கைதான 2 தீவிரவாதிகள் கோர்ட்டில் ஆஜர்: பரபரப்பு வாக்குமூலம்

நாகர்கோவில்: குமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 2 தீவிரவாதிகள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றனர். அவர்கள் 2 பேரும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப்- இன்ஸ் பெக்டர் வில்சன் (57) துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். தக்கலை அருகே திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்த அப்துல் சமீம் (32), நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பகுதியை சேர்ந்த தவுபிக் (28) ஆகியோர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த 7ம்தேதி பெங்களூருவில் பதுங்கியிருந்த முகமது ஹனிப் கான், இம்ரான்கான், முகமது சையது ஆகியோரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் கைது செய்தனர். கைதான இவர்கள் அப்துல்சமீம், தவுபிக் ஆகியோரின் கூட்டாளிகள் ஆவர். இவர்களின் கைதுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தமிழ்நாடு போலீசார் மீது தாக்குதல் நடத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 8ம் தேதி இரவு களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. வில்சனை சுட்டுக் கொன்றது போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கொலை நடந்து 2 நாட்களுக்கு பிறகு டெல்லியில், தீவிரவாத செயல்களுக்கு திட்டமிட்டதாக காஜா மைதீன் (52), அப்துல் சமது (28), சையது அலி நவாஸ் (32) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இதில் சையது அலி நவாஸ், நாகர்கோவில் கோட்டார் இடலாக்குடி பகுதியை சேர்ந்தவர் ஆவார். இவரும், அப்துல் சமீம் மற்றும் தவுபிக் ஆகியோரின் கூட்டாளி ஆவார். தலைமறைவான அப்துல் சமீம், தவுபீக் ஆகியோரை பிடிக்க குமரி மாவட்ட எஸ்.பி. நாத் தலைமையில் மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதற்கிடையே பெங்களூரில் நேற்று முன்தினம் இஜாஸ் பாட்சா,  இம்ரான்கான், சலீம்கான் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதில் இஜாஸ் பாட்சா தான் மகாராஷ்டிராவில் இருந்து துப்பாக்கியை தவுபிக் மற்றும் அப்துல் சமீமுக்கு கொடுத்தது தெரிய வந்தது. இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் தான் உடுப்பியில் கியூ பிரிவு போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இந்த நிலையில் கடந்த 14ம் தேதி காலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி ரயில் நிலையம் அருகே அப்துல் சமீம், தவுபிக் ஆகியோரை தமிழக கியூ பிராஞ்ச் போலீசார் மற்றும் பெங்களூர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.சென்னை கொண்டுவரப்பட்ட இவர்கள் இன்று காலை 7.05 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தக்கலை காவல் நிலையம் கொண்டுவரப்பட்டனர். முன்னதாக காலை 5.30 மணிக்கு களியக்காவிளை காவல் நிலையம் கொண்டுவரப்பட்டு அங்கு வைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தக்கலை காவல்நிலையத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இவர்கள் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

பரபரப்பு வாக்குமூலம்
கைதான 2 பேரும் போலீஸ் விசாரணையில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:  ‘எங்களது அமைப்பை சேர்ந்தவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை, கைது என்று துன்புறுத்தி வந்தனர். அதனால் போலீசாருக்கு எங்களின் எதிர்ப்பை காட்டவே களியக்காவிளையில் சோதனை சாவடியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் வில்சனை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றோம் என்று அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

மனித வெடிகுண்டுகள்
குமரி சப்-இன்ஸ்பெக்டர் படுகொலையில் மொத்தம் 17 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இவர்களில் 3 பேர் மனித வெடிகுண்டாக மாற பயிற்சி பெற்றவர்கள் என்பதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இவர்கள் கர்நாடகா, டெல்லியில் சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்து இருக்கிறது. உடுப்பியில் இருந்து தமிழக கியூ பிரிவு போலீசார் இவர்களிடம் விசாரணை நடத்தியதின் அடிப்படையில் இந்த தகவல்கள் தெரியவந்தது. கர்நாடகாவில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டது தொடர்பாகவும் அப்துல் சமீம் மற்றும் தவுபிக்கிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். இவர்களுக்கு துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மும்பையில் வைத்து இவர்களது கையில் துப்பாக்கி வழங்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.

Tags : militants ,Court , 2 militants,arrested,sub-inspector,murder case
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி