×

இறைச்சி கடையில் விற்பதற்காக செல்ல நாய் அடித்துக்கொலை: ஆசாமிகளுக்கு போலீஸ் வலை

அண்ணாநகர்: சென்னையில் உள்ள பல ஓட்டல்கள் மற்றும் இறைச்சி கடைகளில் ஆட்டிறைச்சி என்ற பெயரில், நாய்க்கறி விற்கப்படுவதாகவும், காடை இறைச்சி என்ற பெயரில் காகங்கள் கொல்லப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. இதனால் அசைவப் பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில், வீட்டில் வளர்க்கப்பட்ட செல்ல நாய் ஒன்றை, மர்ம நபர்கள் கடத்தி சென்று, அடித்து கொன்று, இறைச்சியை மட்டும் எடுத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைந்தகரை பி.பி.தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (40). இவர், தனது வீட்டில் 4 வயது பெண் நாய் ஒன்றை செல்லமாக வளர்த்து வந்தார். இந்நிலையில், இவரது நாய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென மாயமானது. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.  இதுகுறித்து அமைந்தகரை காவல் நிலைத்தில் புகாரளித்தார். பின்னர், தொடர்ந்து தனது நாயை தேடி வந்தார். இந்நிலையில், நேற்று அமைந்தகரை கூவம் கரையோரம் குப்பை தோட்டி அருகே தேடியபோது, அவர் வளர்த்த நாயின் தலை மற்றும் தோல் மட்டும் கிடந்துள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் கதறி அழுதார். பின்னர், அமைந்தகரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த உதவி ஆய்வாளர் ஜெய்குமார், அந்த குப்பை தொட்டியை பார்த்தபோது நாய் கொல்லப்பட்டு அதன் தலை, கை, கால்கள் மற்றும் தோலை உரித்து போட்டுவிட்டு, இறைச்சியை மட்டும் மர்ம நபர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. இந்த இறைச்சி ஓட்டல் அல்லது இறைச்சி கடைகளுக்கு விற்பனை செய்யப்பட்டதா?, இதனை செய்த நபர்கள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் கிடைத்த நாயின் உடல் பாகங்கள் புளூ கிராஸில் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Dog slaughterhouse ,meat shop ,Asami ,Meat store ,slaughterhouse ,asian , Meat store, for sale, pet dog, slaughterhouse, asian, police net
× RELATED விஏஓ வீட்டை உடைத்து 50 சவரன் கொள்ளை: மர்மநபர்களுக்கு வலை