×

ரத்தத்தை சுத்திகரிக்கும் வெள்ளை பூசணிக்காய்: திருஷ்டிக்கு மட்டுமல்ல, மருத்துவமும் நிறைந்தது

‘உணவே மருந்து’ என்பதற்கு காரணம் உணவு பசியை போக்குவதற்காகவும், சுவைக்காகவும் மட்டும் உருவானது அல்ல. நாம் பயன்படுத்தும் உணவு பொருட்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை குறிப்பதாகும். அதன்படி  கொடி இனத்தை சேர்ந்த  பூசணிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. பூசணிக்காயில் மஞ்சள் நிறமுள்ள பூசணி, வெண்மை நிறமுள்ள பூசணி என 2 வகை காணப்படுகிறது. இந்த 2 பூசணிக்காய்களிலும் உள்ள சதைப்பகுதியும், விதைகளும் மருத்துவத்தில் பயன்படுகின்றன.
வெள்ளைப் பூசணிக்காயை பெரும்பாலும் திருஷ்டி கழிக்க மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் இதில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் உடல் எடையை குறைக்க உதவும். புண்களை ஆற்றவும், தழும்புகளை காணாமல் போகச் செய்யவும் பூசணிக்காய் பயன்படும். பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். பூசணிக்காய் விரும்பி சாப்பிடுபவர்களுக்கு கண் பார்வை  சிறப்பாக இருக்கும். மிகக்குறைவான கலோரி கொண்டது. இதில் கொலஸ்ட்ராலும்(கொழுப்பு) இல்லை.

பயன்கள்: ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் உதவும். நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்க பயன்படுகிறது. அல்சர் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு வெள்ளை பூசணி சாறு உடனடி பலனைத் தரும். அதுமட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளாமல் இருந்தால் ஏற்படும் அஜீரண கோளாறு பிரச்னையை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி சாறு உதவும்.தினமும் காலையில் வெள்ளை பூசணி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப்பட்டு, வயிற்றில் தொற்றுகள்  ஏற்படுவதைத் தடுக்கலாம். காலையில் தினமும் வெள்ளை பூசணி சாறை குடித்து வந்தால் உடல் எடை  குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். உடல் சூடு தணியும். அதுமட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல்  குளிர்ச்சியுடன் இருக்கும்.

 வெள்ளை பூசணி சாற்றில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையில் குடித்து வந்தால், ரத்தம் சுத்தமாகும். உடலில் ரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த்தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்கலாம்.சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறுநீருடன் ரத்தம் வெளிவருவது, அல்சரினால் உடலினுள் ரத்தக்கசிவு ஏற்படுவது, மூலம் போன்றவற்றினால் ஏற்படும் ரத்தக்கசிவு போன்றவற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும். சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில்  ஒரு தேக்கரண்டி சர்க்கரை அல்லது தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக குணமாகும்.



Tags : White Pumpkin, Purifier, medicine
× RELATED கோடை வெப்ப தாக்கத்தையொட்டி பேருந்து...