×

திருச்சுழி பகுதி கிராமப்புறங்களுக்கு பஸ் வசதி இல்லாததால் சரக்கு வாகனங்களில் மக்கள் பயணம்

* விபத்து ஏற்படும் அபாயம்
* மினிபஸ் இயக்க கோரிக்கை

திருச்சுழி: திருச்சுழி பகுதியில் கிராமங்களுக்கு போதிய பஸ்வசதி இல்லாததால், பொதுமக்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்கின்றனர். இதனால், விபத்தில் சிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. எனவே, மினிபஸ் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி பகுதியில் கிராமங்கள் அதிகளவில் உள்ளன. இந்த கிராமங்களுக்கு போதிய பஸ் வசதி இல்லை. குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பஸ் போக்குவரத்து உள்ளது. இதனால், சரக்கு வாகனம், லாரி, ஆட்டோ ஆகியவற்றில் பயணம் செய்கின்றனர். இவை ஆபத்தான பயணம் என தெரிந்தே, பயணம் செய்கின்றனர். கோயில் திருவிழா, திருமணம் உள்ளிட்ட விஷேச நிகழ்ச்சிகளுக்கும் சரக்கு வாகனம் மற்றும் லாரிகளிலே பயணிக்கின்றனர். இதுதவிர பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியரும் சரக்கு வாகனங்களில் செல்கின்றனர்.

கிராமப் பகுதிகளில் சாலைகள் சரியில்லாத காரணத்தால், சரக்கு வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. சில நேரங்களில் சரக்கு வாகனங்களில் கால்நடைகளோடும் பொதுமக்கள் பயணிக்கின்றனர். போக்குவரத்து போலீசார் எச்சரித்தும், கிராமப்புறங்களுக்கு போதிய பஸ் வசதியில்லாததால், சரக்கு வாகனங்களில் பயணிப்பது தொடர்கதையாகி வருகிறது. வரிசையூர், குமிழங்குளம், துய்யனூர் குழலிகுளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு இன்று வரை பஸ் வசதியில்லை. எனவே, விருதுநகர் மாவட்ட நிர்வாகம், சரக்கு வாகன பயணத்தை தவிர்க்க, பஸ் போக்குவரத்து இல்லாத கிராமங்களுக்கு மினிபஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்: சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது ஆபத்து என்பதை உணராத பொதுமக்கள், தங்களின் அவசரத்திற்காக சரக்கு வாகனங்களை வாடகைக்கு எடுத்து பயணிக்கின்றனர். இவ்வாறு செல்லும் வாகனத்தில் மீது நடவடிக்கை போலீசார் நடவடிக்கை எடுப்பதோடு, மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இல்லையெனில் இது தொடர்கதையாகும்.  மினி பஸ்களை இயக்கியாவது இத்தகைய சிரமத்தினை போக்க வேண்டும்’ என்றனர்.


Tags : areas ,Trichy , Trichy, Bus, Freight Vehicle
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...