×

மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சியில் அரசுப் பள்ளி அருகே குப்பை குவிப்பால் சுகாதாரக்கேடு: மாணவ, மாணவியர் அவதி

ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே, மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சியில் அரசுப் பள்ளி அருகே, சாலையோரம் குவிக்கப்பட்டுள்ள குப்பையால் மாணவ, மாணவியருக்கு சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜபாளையம் அருகே, மேலப்பாட்டம் கரிசல்குளம் ஊராட்சியில் செண்பக தோப்பு சாலை செல்கிறது. இந்த சாலையில் திருவள்ளுவர் நகர் விலக்கில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியை சுற்றியுள்ள ராம்நகர், சக்தி நகர், பாபுஜி நகர். ஜே.ஜே நகர், இந்திரா நகர், சாஸ்திரி நகர், வஉசி நகர், ஆறுமுகா நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளை, ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் சேகரிக்க வருவதில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். ஒரு சிலர் தங்கள் வீட்டில் சேரும் குப்பைகளை தீ வைத்து எரிக்கின்றனர். ஆனால் பலர் குப்பைகளை கொட்ட இடமின்றி, பள்ளியின் முன்புறம் உள்ள சாலையோரம் கொட்டுகின்றனர். இதையும் ஊராட்சி நிர்வாகம் அகற்ற நடவடிக்கை எடுப்பதில்லை. நீண்ட நாட்களாக குப்பை சேர்ந்ததால் தற்போது சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. காய்கறி கழிவுகளுடன், இறைச்சி, பழங்கள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் குப்பைகளுடன் கிடக்கின்றன. நாட்கணக்கில் தேங்கி உள்ள குப்பைகளை அந்த வழியாக செல்லும் மாடுகள் மற்றும் பன்றிகள் கிளறி விடுவதால், அப்பகுதி முழுவதும் அழுகிய துர்நாற்றம் வீசுவதாக அந்த வழியாக செல்வோர் தெரிவித்தனர்.

எனவே அந்த இடத்தை கடந்து செல்லும் போது மூக்கை பிடித்தபடியே நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் மர்மநபர்கள் குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் புகையானது, அருகில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளை பாதிக்கிறது. இதனால், மாணாக்கர்களுக்கு சுவாச கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், குப்பை எரிப்பதால் ஏற்படும் புகை சாலையை அடைத்து விடுவதால் விபத்து அபாயம் உள்ளது. இந்த குப்பைகளை உடனுக்குடன் சுத்தம் செய்யக்கோரி பலமுறை ஊராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் முறையிட்டும், அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

பொதுமக்கள் நலனைகருத்தில் கொண்டு, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் பள்ளி முன்பாக குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலப்பாட்டம் கரிசல்குளம் கிராம மக்கள் தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளனர். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் செல்வராஜிடம் கேட்டபோது, ‘குப்பைகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

Tags : garbage dump ,Student ,panchayat government school ,Karikalukulam ,Kariskulam Panchayat ,Government School , Overview Kariskulam Panchayat, Government School, Junk, Healthcare
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி...