×

மண் கிடைக்காததால் தொழில் நலிவு: கருப்பு பொங்கலாக கொண்டாட மண்பாண்ட தொழிலாளர்கள் முடிவு

கும்பகோணம்: மண் கிடைக்காததால் தொழில் நலிவடைந்து வருவதால் வரும் பொங்கலை கருப்பு பொங்கலாக கொண்டாட மண்பாண்ட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். பொங்கல் பண்டிகை விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விழாவன்று மண்பானைகளில் பொங்கல் வைத்து மக்கள் வழிபடுவர். கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலானோர் எவர்சில்வர், பித்தளை பானைகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பெரும்பாலானோர் உலோக பாத்திரங்களை தவிர்த்து விட்டு பழைய முறைப்படி மண்ணால் தயார் செய்த பானைகளை பயன்படுத்த துவங்கியுள்ளனர். உலோக பாத்திரங்களில் பொங்கல் சமைத்து சாப்பிட்டால் ருசி இல்லாமல் இருப்பதுடன் உணவின் தன்மை குறைந்து விடும்.

இதனால் உடலுக்கு பல விதமான உபாதைகள் ஏற்படும் என்பதை கருத்தில் கொண்டு தற்போது மண்ணினாலான பாத்திரங்களை வாங்கும் வழக்கத்துக்கு மக்கள் மாறியுள்ளனர். இதற்காக கும்பகோணம் அடுத்த மாத்தி, பட்டீஸ்வரம், சுந்தரபெருமாள் கோவில், சுவாமிமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் பொங்கல் பண்டிகைக்காக தயார் செய்யப்பட்ட மண் பானைகள் விற்பனைக்காக வியாபாரிகள் குவித்து வைத்துள்ளனர்.
மண் பானையின் விலை ரூ.150 முதல் ரூ.300 வரையிலும், சிறிய பானை ரூ.100 முதல் ரூ.150 வரையிலும், மடக்கு எனும் மூடி ரூ.35க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் பானை செய்வதற்கு போதுமான மண் கிடைக்காததால் அதிக விலைக்கு மண் வாங்கி வந்து பானை செய்வதாலும், போதுமான அளவு மண் கிடைக்காததால் மண்பாண்ட தொழில் நலிவடைந்ததால் தொழிலாளர்கள் மாற்று தொழிலுக்கு சென்று வருகின்றனர்.

எனவே தமிழக அரசு உடனடியாக மண்பாண்ட தொழிலை காப்பாற்ற மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். வரும் பொங்கல் பண்டிகையை கருப்பு பொங்கல் தினமாக அனுசரிக்கவுள்ளோம் என்று தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தஞ்சை மாவட்ட குலாலர் மண்பாண்ட தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், தமிழக அரசு பூமிக்கடியில் மண் எடுப்பதற்கு தடை விதித்துள்ளதால் அதிக விலைக்கு மண் வாங்கி அதை வாகனத்தில் ஏற்றி வந்து தயார் செய்து விற்பனை செய்வது பெரும் சிரமமாக உள்ளது. மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருவதால் பெரும்பாலான தொழிலாளர்கள் மாற்றுத்தொழிலுக்கு சென்று விட்டனர்.

கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பாபநாசம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்களுக்கு தமிழக அரசு சீலா வீல் வழங்கப்படும் என அறிவித்தனர். ஆனால் இதுவரை வழங்கவில்லை. மேலும் மண் எடுப்பதற்கும், மூல பொருட்களை மானிய விலையில் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை தமிழக அரசுக்கு வலியுறுத்தும் வகையில் வரும் பொங்கல் திருநாளை கருப்பு பொங்கல் விழாவாக கொண்டாடவுள்ளோம் என்றார்.

Tags : Pottery workers , The end of the workforce, black pongal, pottery workers
× RELATED விழாவுக்கு சில நாட்களே உள்ள நிலையில்...