×

கொச்சி மரடுவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டடங்கள் வெடிவைத்து தகர்ப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சி மரடுவில் ஜெயின் கோரல் குடியிருப்புகள் வெடிவைத்து இடித்து அகற்றப்பட்டது. விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட புகாரில் நீதிமன்ற உத்தரவுப்படி அகற்றப்பட்டுள்ளது. நேற்று 2 கட்டடங்கள் வெடிவைத்து தகர்க்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 2 கட்டடங்கள் தகர்க்கப்பட்டன. விதிகளை மீறி கட்டப்பட்ட 343 வீடுகளை இடித்து தடைமட்டமாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கட்டிடத்தை சுற்றியுள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு 200 மீட்டர் தொலைவுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள மரடு பகுதியில் சுற்றுச்சூழல் விதிகளை மீறி, கட்டப்பட்டிருந்த 343 வீடுகள் அடங்கிய அடுக்குமாடிக் குடியிருப்புகளை இடிக்க கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி ஜனவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் அந்த கட்டங்களை தகர்க்க கேரள அரசு திட்டமிட்டது.

இதில் 18 தளங்களுடன் 90 வீடுகள் கொண்ட ஹெச்20 ஹோலி ஃபெயித் கட்டடம் மற்றும் 73 வீடுகள் கொண்ட அல்ஃபா செரீன் கட்டடம் ஆகியவை வெடிவைத்து நொடி பொழுதில் தகர்க்கப்பட்டன. பலத்த பாதுகாப்புடன், அடுத்தடுத்து இரண்டு கட்டடங்களும் பாதுகாப்பாக இடிக்கப்பட்டன. கட்டடங்கள் இடிக்கப்படுவதற்கு முன்பு அதில் இருந்த கண்ணாடி ஜன்னல்கள் அகற்றப்பட்டன. மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடிக்கப்படும் கட்டடங்களுக்கு அருகே இருக்கும் குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்காக தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் நேற்று 2 கட்டடங்கள் வெடி வைத்து இடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Tags : Explosion ,demolition ,buildings ,Kochi Kochi , Explosion , demolition, buildings, Kochi
× RELATED பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு