×

களியக்காவிளை எஸ்.ஐ. சுட்டுக்கொலை தீவிரவாதிகளுடன் போனில் பேசிய 2 பேர் சிக்கினர்: 10 பேரிடம் விசாரணை

நாகர்கோவில்: குமரி எஸ்.ஐ. சுட்டுக்கொலையில் போலீசாரால் தேடப்படும் குற்றவாளிகளுடன் போனில் பேசிய 2 ேபர் போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. குமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் கடந்த 8ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு சப்.இன்ஸ்ெபக்டர் வில்சன் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக, குமரியை சேர்ந்த அப்துல் சமீம்(32), நாகர்கோவிலை சேர்ந்த தவுபிக்(28) ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளனர். மேலும், எஸ்.பி. ஸ்ரீநாத் தலைமையில் மொத்தம் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர கேரளாவில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு கேரளாவில் 3 பேரை தனிப்படை போலீசார் பிடித்தனர். அவர்களிடம் இருந்து கம்ப்யூட்டர்கள், செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுதவிர, குமரி மாவட்டத்தில் தக்கலை, திருவிதாங்கோடு, நாகர்கோவில் பகுதிகளில் இருந்து 6 பேரை போலீசார் பிடித்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று மாலையில் கேரள மாநிலம் இஞ்சிவிளையை சேர்ந்த தாசிம், சித்திக் ஆகிய 2 பேரை கேரள தீவிரவாத தடுப்பு போலீசார் பிடித்துள்ளனர். அவர்கள் தவுபீக் மற்றும் அப்துல் சமீமுடன் போன் உரையாடலில் இருந்தவர்கள் என கூறப்படுகிறது. அவர்களிடம் பாறசாலை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணை தொடர்பான விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.

பாலக்காட்டில் கைதான 2 பேர் விடுவிப்பு
குமரி மாவட்டம் களியக்காவிளை போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் கேரள மாநிலம் பாலக்காடு மேப்பரம்பு மாப்பிள்ளைக்காடு, கள்ளிக்காட்டை  சேர்ந்த இருவரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் கேரள-தமிழக போலீசார் 6 மணி நேரம் பாலக்காடு எஸ்பி. தலைமை  அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்களுக்கு சிறப்பு எஸ்.ஐ. கொலையில் தொடர்பில்லை என தெரியவந்தது. இதையடுத்து இருவரும் விடுவிக்கப்பட்டனர் என பாலக்காடு எஸ்பி. சிவவிக்ரம் தெரிவித்தார்.

Tags : terrorist extremists ,KALIYAKAVILI SI Two , KALIYAKAVILI S.I. The shooting, the investigation
× RELATED இலங்கை சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம்...