×

சிஏஏ.க்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அதே நேரம் மேற்கு வங்கம் வந்த பிரதமர் மோடியுடன் மம்தா பேச்சு: அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு

கொல்கத்தா: கொல்கத்தா வந்த பிரதமர் மோடியை மேற்குவங்க முதல்வர் மம்தா தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை மேற்க வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்நிலையில், பிரதமர் ேமாடி 2 நாள் பயணமாக நேற்று மேற்கு வங்கம் சென்றார். கொல்கத்தா துறைமுக கழகத்தின் 150வது ஆண்டு நிறைவு விழா, நேதாஜி உள்நாட்டு விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது.

இதில் பிரதமர் மோடி, மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தன்கர், முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டனர். கொல்கத்தாவில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களான பழைய கரன்சி கட்டிடம், தி பெல்வதேரே இல்லம், மெட்காப் இல்லம் மற்றும் விக்டோரியா நினைவு அரங்கம் ஆகியவற்றை மத்திய பண்பாட்டு அமைச்சகம் புதுப்பித்துள்ளது. இவற்றையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மோடியின் இந்த 2 நாள் பயணத்தின்போது அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவு ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களை திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரப்படுத்தி உள்ளன.

நேற்று காலை நடந்த போராட்டத்தில் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். இந்நிலையில், கொல்கத்தாவில் ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த பிரதமர் மோடியை நேற்று மாலை மம்தா திடீரென தனியாக சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. மோடிக்கு எதிராகவும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடுமையாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், மோடியை மம்தா சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மேலும்,

இந்த சட்டத்துக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்துவது பற்றி காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடத்தப்படும் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்கும்படி விடுக்கப்பட்ட அழைப்பை மம்தா நேற்று முன்தினம் நிராகரித்தார்.
இதனால், இந்த சந்திப்பால் எதிர்க்கட்சிகளும் குழப்பம் அடைந்துள்ளன.

சந்திப்புக்கு பிறகும் மம்தா போராட்டம்
ராஜ்பவனில் நேற்று மாலை மோடியை சந்தித்த பிறகும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக ராஜ்பவன் அருகே திரிணாமுல் மாணவர் அணியினர் நடத்திய போராட்டத்தில் மம்தா கலந்து கொண்டார். அப்போது, ‘குடியுரிமை திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த விட மாட்டேன்,’ என்று சபதம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்’
மோடியை சந்தித்த பிறகு மம்தா அளித்த பேட்டியில், ‘‘மரியாதை நிமித்தமாக பிரதமரை சந்தித்தேன். மத்திய அரசிடம் இருந்து, மேற்கு வங்கத்துக்கு ரூ.28 ஆயிரம் கோடி நிலுவைத் தொகை வர வேண்டியுள்ளது என்பதை தெரிவித்தேன். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவுக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடப்பதை தெரிவித்து அதை திரும்ப பெறுவது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என கூறினேன். டெல்லி வந்து அனைத்து விஷயங்கள் குறித்து பேசும்படி பிரதமர் கூறினார்,’’ என்றார். இதற்கு பின்னர்  மாணவர்களிடத்தில் வந்த மம்தா, பிரதமருடனான தனது சந்திப்பு குறித்து விளக்கினார்.


Tags : Mamata ,West Bengal ,Modi ,CAA ,Opposition ,Amit Shah , C.A., Prime Minister Modi, Mamta, Speech
× RELATED பாஜதான் ஊழல் கட்சி: பிரதமர் மோடிக்கு மம்தா பதிலடி