×

பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் தயாரிப்பு பணி தீவிரம்: உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் தயார்

பெரம்பலூர்: பொங்கல் பண்டிகைக்காக பெரம்பலூர் அருகே காடூர் கிராமத்தில் வெல்லம் தயாரிப்புப் பணிகள் தீவிரமாக நடை பெறுகிறது. இதில் உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் தயாராகி வருகிறது. தமிழகத்தில் விழுப்புரம் கடலூர் மாவட்டங்களுக்கு அடுத்தபடியாக, கரும்பு உற்பத்தியில் சிறந்து விளங்குவது பெரம்பலூர் மாவட்டம் தான். பெரம்பலூர் மாவட்ட த்தில் மட்டும் ஆண்டுக்கு 18 ஆயிரம் ஏக்கர் முதல் 23 ஆயிரம் ஏக்கர் வரை கரும்பு பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்படுகிறது. இவற்றை நம்பியே எறையூர் பகுதியில் பொதுத்துறை சர்க்கரை ஆலையும், உடும்பியம் பகுதியில் தனியார் சர்க்கரை ஆலையும் இயங்கி வருகின்றன. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுக்கா வேப்பூர் ஒன்றியத்தில் காணும் இடமெங்கும் கரும்புப் பயிருக்கான சொர்க்க பூமியாக திகழும் காடூர் கிராமத்தில் ஆண்டுக்கு சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்ப ட்டுவருவதால், ஆலைகளை நம்பியிராமல் இங்கு மட்டும் அச்சு வெல்லம் தயாரிக்கும் பணிகளே அசறாமல் நடந்து வருகிறது.

காடூர் கிராமத்தில் மட்டும் சங்கர், தர்மராஜ், தங்கவேல், நல்லதம்பி, ராஜேந்திரன், கண்ணு உள்ளிட்ட 10 விவசாயிகள் தங்கள் வயல்களில் கரும்புக்கான கிரஷர் இந்திரத்தால் கரும்புச் சாற்றை பிழிந்துஎடுத்து, அகண்டக் கொப்பரைகளில் பாகாகக் காய்த்து பதமான தருணத்தில் அச்சுகளில் வார்த்து, அச்சுவெல்லமாகவும், அச்சுகளில் வார்க்காமல் கைகளில் உருட்டிப்பிடித்து உருண்டை வெல்லமாகவும், நாட்டுசர்க்கரையாகவும் 3 ரகங்களில் தயாரிக்கின்றனர். கரும்புப்பாகு உரிய பதம் வந்தவுடன் கொப்பரையை கவிழ்த்து பானையில் ஊற்றி வைத்து அச்சில் வார்த்து அச்சுவெல்லமாகவும், பாகு சூடு ஆறிய நிலையில் கைகளில் உருட்டி உருட்டி உருண்டை வெல்லமாகவும் தயாரிக்கின்றனர். இவை தலா 30 கிலோ எடை கொண்ட சிப்பமாகப் பேக்கிங் செய்து விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து வெல்லம் தயாரிக்கும் பிரபல விவசாயி சங்கர் கூறும்போது: தற்போது வெல்லத்திற்கு நல்ல சீசன் உள்ளது. பொங்கல் பண்டிகை என்பதால் ஒரு சிப்பம் ரூ1,200 க்கு கிடைக்கிறது. இதுவே லாபகரமாக உள்ளது. ஆனால் பொங்கலுக்கு பிறகு பிப்ரவரி மாதத்தில் ஒரு சிப்பம் ரூ 800க்கு குறைந்துவிடும். நாமக்கல் மாவட்டம் பிலிக்கல்பாளையம் விவசாயிகள் விற்பனை சந்தையில் காடூர் வெல்லத்திற்கு மவுசு அதிகமுள்ளது. இந்த சந்தைக்கு தவறாமல் வரும் கேரள வியாபாரிகள் காடூர் வெல்லம் எப்போது வருமெனக் காத்திருந்து வெல்லத்தை வாங்கிச் செல்வார்கள். திருச்சி மாவட்ட வியாபாரிகளும் இங்கு வந்து காடூர்வெல்லத்தை கொள்முதல் செய்து செல்வது வழக்கமாக உள்ளது. அந்த அளவுக்கு சுத்தமான தரமான வெல்லத்தைத் தயாரித்து கொடுக்கிறோம் என்றார்.

அரசே கொள்முதல்..

ரசாயணப் பொருட்களை கலந்து தயாரிக்கும் சர்க்கரையை விட, அதிக கெடுதல் இல்லாத வெல்லத்தின் அருமை இப்போது தான் மக்களுக்கு புரிந்து வரும் சூழலில் இதுபோன்ற தரமான வெல்லத்தை அரசே கொள்முதல் செய்து ரேஷன்கடை, கூட்டுறவு அமராவதி விற்பனை அங்காடிகளில் விற்பனை செய்தால் பொதுமக்கள் முழுமையாக பயன்பெற முடியும் என்பது சமூக ஆர்வலர்களின் வேண்டு கோளாக உள்ளது.

25ஆயிரம் சிப்பம் வெல்லம் உற்பத்தி...
காடூர் கிராம கரும்பு வயல்களில் நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் என மே மாதம் வரை வெல்லம் தயாரிப்பு பணிகளுக்கான சீசனாக உள்ளது. இதில் டிசம்பர் மாத இறுதி முதல் ஜனவரி முதல்வாரம் வரையிலான தயாரிப்பு பணிகள் பொங்கல் பண்டிகையை கணக்கிட்டே அதிகளவு நடக்கிறது. டிசம்பர் தொடங்கி மே மாதம் வரை காடூரில் உள்ள 10 கரும்பு கிரஷர்கள் மூலம் 25ஆயிரம் சிப்பம் வெல்லம் உற்பத்தி செய்யப்படுகிறது.

Tags : Introduction ,Pongal , Pongal
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா