×

ஆண்டுக்கணக்கில் இழுத்தடிக்கும் அவலம்: திருவொற்றியூர், மணலியில் பணி மந்தம்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் ரூபாய் 42 கோடியில் துவக்கப்பட்ட கால்வாய் மேம்பால கட்டுமான பணி குறித்த நேரத்தில் முடிவடையாமல் மந்தகதியில் நடைபெறுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.

திருவொற்றியூரில் இருந்து கரிமேடு தெரு அருகே உள்ள மணலி சாலை வழியாக கால்வாய் மேம்பாலத்தை கடந்து மாநகர பேருந்து, லாரி, கார், மோட்டார் பைக் என தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த நிலையில் இந்த கால்வாய் மேம்பாலம் பழுதடைந்து வலுவிழந்தது. இந்த பாலத்தின் மீது வாகனங்கள் சென்றால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை ஏற்பட்டது. எனவே, கால்வாய் பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, கடந்த 2016ம் ஆண்டு ரூ. 42 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்ட திட்டமிட்டு பணி துவங்கப்பட்டது. இதன்படி 530 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், நடைபாதை மற்றும் இருவழி பாதையுடன் கூடிய மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது.

2018 டிசம்பர் 31ம் தேதி முடிய வேண்டிய மேம்பால கட்டுமான பணி பல்வேறு காரணங்களால் குறித்த நேரத்தில் முடியவில்லை. இதனால் பழுதடைந்த பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை உள்ளது. பீதி அடைந்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கால்வாய் மேம்பால கட்டுமான பணியை துரிதப்படுத்த வேண்டும் என்று பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதனால் 6 மாதங்கள் முன்பு மேம்பால பணி தீவிரப்படுத்தப்பட்டது. மேலும் கால்வாய் மேம்பாலம் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு பக்கிங்காம் கால்வாய் ஓரம் மாற்றுப்பாதை அமைக்கப்பட்டு அதன் வழியாக வாகனங்கள் சென்றன. ஆனாலும் தற்போது வரை கால்வாய் மேம்பால பணி மந்த கதியிலேயே நடந்து வருகிறது. எனவே, வாகன ஓட்டிகள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி மணலிக்கு செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இந்த கால்வாய் மேம்பால பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மணலி அருகே ரூ.19 கோடி செலவில் சடையங்குப்பம் மழைநீர் கால்வாய் மேம்பாலம் பணி 10 ஆண்டு காலம் ஆகியும் முடிவடையாமல் கிடப்பில் உள்ளது. பெரு மழையின் போது சென்னை புறநகர் பகுதிகளான திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய மழைநீர் புழல் ஏரியில் தேக்கப்படுகிறது. இவ்வாறு தேங்கும் மழைநீர் அதிகமாகி ஏரி நிரம்பினால் மதகு திறக்கப்பட்டு அங்கிருந்து மழைநீர் கால்வாய் வழியாக ஆமுல்லைவாயல், கொசப்பூர் சடையங்குப்பம் ஆகிய பகுதிகளை கடந்து எண்ணூரில் உள்ள முகத்துவார ஆற்றில் கலக்கிறது. இந்நிலையில் பெரு மழையின் போது கால்வாய் வழியாக வரும் உபரிநீர் சடையங்குப்பம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து விடுகிறது இதனால் அங்குள்ள மக்கள் அங்கிருந்து வெளியே வரமுடியாமல் தவிப்பார்கள். பின்பு ராணுவம் மற்றும் புயல் கால மீட்பு படை உதவியுடன் மீட்டு பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்படுவார்கள்.

இவ்வாறு மழைகாலத்தில் கால்வாய் நிரம்பி ஏற்படும் பாதிப்புகளை தடுக்க கடந்த 2008ம் ஆண்டு சடையங்குப்பம் அருகே ரூபாய் 19 கோடி செலவில் கால்வாய் மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத்துறை திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் துவங்கப்பட்டது. இந்த பணி 40 சதவீதம் மட்டுமே முடிக்கப்பட்டு பல்வேறு காரணங்களால் தற்போது நடைபெறாமல் கிடப்பில் உள்ளது.

இதனால் இங்கு வசிக்கும் பொதுமக்கள் பாலத்தை கடந்து செல்ல முடியாமல் சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பாதியில் கட்டப்பட்ட மழைநீர் கால்வாய் மேம்பாலத்தின் மீது மணலி மண்டலம் சார்பில் இரும்பு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு தற்போது அந்த இரும்பு படிகட்டையே பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த படிக்கட்டுகள் போதிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது.
மழைக்காலங்களில் மேம்பாலத்தை கடந்து செல்லும் பொதுமக்கள் கால் இடறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இந்த மேம்பாலப் பணியை விரைவாக முடிக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர் ஆனால், 10 ஆண்டு காலம் ஆகியும் மேம்பால கட்டுமான பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Tags : Work slowdown ,Mangalore Thiruvotriyur , Thiruvotriyur
× RELATED வால்பாறையில் பூங்கா பணி மந்தம்