×

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிப்பை உடனடியாக வெளியிட மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்குமாறு தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சிக்கு தற்போது மொத்தம் 27 மாவட்டங்களில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தல் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கும் தேர்தலை நடத்த வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக, சட்ட பஞ்சாயத்து இயக்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில் ஆறுமுகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை கடந்த வாரம் தாக்கல் செய்தார். அதில், “தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை அனைத்திற்கும் சேர்த்துதான் நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவிட்டுள்ளது.

ஆனால், மாநில தேர்தல் ஆணையம் ஊரக உள்ளாட்சிக்கு மட்டும் தேர்தலை நடத்தி விட்டு, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்தவில்லை. அதனால் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதியை உடனடியாக அறிவித்து, அதன் அறிவிப்பாணையை வெளியிட வேண்டும். இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதாடினார். இதையடுத்து, தமிழகத்தில் நகர உள்ளாட்சி தேர்தலை நடத்த உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவிற்கு பதிலளிக்க தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இடைக்கால தடை

மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை முதலில் விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது பதிவு செய்யப்பட்ட வீடியோ பதிவுகளை தாக்கல் செய்ய வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், இது தொடர்பாக உயர் நீதிமன்ற பதிவாளர் பதிலளிக்கவும் நோட்டீஸ் அனுப்பி நேற்று உத்தரவிட்டுள்ளது.

Tags : Supreme Court ,Tamil Nadu ,government , Supreme Court notice, Tamil Nadu government
× RELATED முல்லைப் பெரியாறில் கேரள அரசு கட்டும்...