×

சிவகாசி அருகே அவலம்: கடம்பன்குளம் கண்மாயில் தேங்கி கிடக்கும் கழிவுநீர்... அதிகாரிகள் வேடிக்கை

சிவகாசி: சிவகாசி அருகே கடம்பன்குளம் கண்மாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் கிராம மக்கள் சுகாதார சீர்கேட்டில் தவித்து வருகின்றனர். சிவகாசி அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கடம்பன்குளம் கண்மாய் உள்ளது.  இந்த கண்மாய் சுமார் 100 ஏக்கர் பரபரப்பளவில் அமைந்துள்ளது. திருத்தங்கல் நகராட்சி, முத்துராமலிங்கபுரம் காலனி, நேருகாலனி, விவேகானந்தர் காலனி பகுதிகளுக்கு நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கும் வகையில் இந்த கண்மாய் உள்ளது. முக்கியதுவம் வாய்ந்த இக்கண்மாயில் தற்போது பராமரிப்பு இன்றி, சீமை கருவேல செடிகள் வளர்ந்து உள்ளன. திருத்தங்கல் நகர் மற்றும் பள்ளபட்டி ஊராட்சியில் மூன்று காலனி பகுதியில் உள்ள  அனைத்து பகுதி கழிவு நீரும் இங்குதான் விடப்படுகின்றன. இதனால் கண்மாய் கழிவுநீர் குட்டையாக காட்சியளிக்கின்றது. கண்மாய் நீர் வரும் ஓடைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டும், சேதமடைந்தும் விட்டன.

இதனால் மழை நீர் கண்மாய்க்கு வருவதில்லை. கண்மாயில் கட்டட கழிவு, குப்பை கொட்டப்பட்டு, கொசுக்களின் உற்பத்தி கேந்திரமாக உள்ளது. இதை துார் வாரி, நீர்வரத்து ஓடைகளை சீரமைத்து கண்மாய்க்கு மழை நீர் வரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலதரப்பு மக்களும் வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. கண்மாயில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதால் சுற்றுப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் மாசுபடும் அபாய நிலை உள்ளது. கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டும் அதற்கான பணிகள் இந்த கண்மாயில் தற்போதுவரை துவங்கப்படவில்லை. போதிய சுகாதார வசதிகளை ஊராட்சி நிர்வாகம் செய்து கொடுக்காததால் கண்மாய் சாலையை பொதுமக்கள் திறந்த வெளிகழிப்பி–்டமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது,‘‘கண்மாயில் கால்வைத்து எடுத்தாலே காலில் அரிப்பு ஏற்படுகின்றது. அந்த அளவிற்கு கண்மாய் தண்ணீர் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக இதே நிலையில்தான் இந்த கண்மாய் உள்ளது. எந்த அதிகாரிகளும் வந்து பார்த்து நடவடிக்கை எடுப்பது கிடையாது. கண்மாயில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் ஏராளமான பொதுமக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கண்மாயை சுற்றி அக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கண்மாயை முதலில் தூர்வார வேண்டும். கழிவுநீரால் ஏற்படும் ஆபத்துகளை தடுக்கும் வகையில் முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.


Tags : Sivakasi ,Kadampankulam Blind Sewer ,Fun , Sivakasi, Kadambankulam Blind, Sewer
× RELATED சிவகாசி-விருதுநகர் சாலையில்...