×

பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை 25 நாட்களில் ரூ.5.73 கோடி வசூலாகி சாதனை

பழநி: பழநி கோயிலில் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கையில் 25 நாட்களில் ரூபாய் 5.73 கோடி வசூலாகி சாதனை படைக்கப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலின் கடந்த 22 நாட்களுக்காக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. கோயில் அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், பள்ளி, கல்லூரிகளின் மாணவ- மாணவிக் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இந்த உண்டியல் எண்ணிக்கையில் ரொக்கப் பணமாக ரூபாய் 5 கோடியே 73 லட்சத்து 41 ஆயிரத்து 890 கிடைத்தது. தங்கம் 890 கிராம், வெள்ளி 15 ஆயிரத்து 560 கிராம், வெளிநாட்டு கரன்சி 938 ஆகியவை கிடைத்தது. கடந்த தைப்பூச திருவிழாவின்போது 30 நாட்களில் உண்டியல் எண்ணிக்கையில் ரூபாய் 6 கோடி கிடைத்ததே இதுவரை சாதனையாக உள்ளது.

ஆனால், விழாக்கள் எதுவும் இல்லாத நிலையில் சாதாரண நாட்களிலேயே 25 நாளில் ரூபாய் 5.73 கோடி வசூலாகி உள்ளது பக்தர்கள் மத்தியில் பிரமிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 3 மாதங்களாகவே உண்டியல் எண்ணிக்கையில் கிடைக்கும் தொகை ரூபாய் 3 கோடிக்கு அதிகமாகவே இருந்து வருகிறது. இதுபோல் ரோப்காரில் இதுவரை இல்லாத அளவு கடந்த மாதம் ஒரே நாளில் ரூபாய் 1.75 லட்சத்திற்கு மேல் வசூலாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. உண்டியல் எண்ணும் பணியை பழநி கோயில் செயல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டி, துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் சேகர், முதுநிலை கணக்கியல் அதிகாரி மாணிக்கவேல் உள்ளிட்டோர் மேற்பார்வையிட்டனர்.

Tags : Palani Temple Undial , Palani Temple, Undial, Adventure
× RELATED பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை 25 நாட்களில் ரூ.5.73 கோடி வசூலாகி சாதனை