×

டெல்லியில் மாணவர்கள் மீது போலீஸ் தடியடியால் பதற்றம்: விரட்டி பிடித்து கைது செய்தனர்

புதுடெல்லி: டெல்லி ஜேஎன்யு வளாகத்தில் கடந்த 5ம் தேதி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடந்த போது , முகமூடி அணிந்த 50க்கும் அதிகமான நபர்கள் பல்கலைக்குள் புகுந்து மாணவர்கள் மீது வெறித்தனமாக தாக்குதல் நடத்தினர். விடுதிக்குள் அத்துமீறி புகுந்து மாணவிகள் மீதும் ஆக்ரோஷ தாக்குதல் அரங்கேறியது. சம்பவத்தில் ஜேஎன்யு மாணவர் சங்க தலைவர் அசிகோஷ் மண்டை பிளந்தது. மேலும் 35க்கும் அதிகமான மாணவர்கள் தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக, போலீசாரும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறையும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில், ஜேஎன்யுவின் மாணவர்கள் மீதான வன்முறையை கண்டித்தும், துணைவேந்தர் பதவி விலக வலியுறுத்தியும் நூற்றுக்கணக்கான மாணவர்களும், ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மண்டி ஹவுசில் இருந்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் திருப்தி ஏற்படாததால், அவர்கள் அங்கிருந்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து, துணைவேந்தர் பதவி நீக்க வலியுறுத்துவது என முடிவு செய்தனர்.ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி செல்ல அனுமதியில்லை என்று போலீசார் அவர்களை தடுத்தனர். ஆனால், அத்துமீறி செல்ல முயன்றதால், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இதில் பல மாணவர்கள் மண்டை பிளந்து ரத்தம் சொட்ட அலறியடித்து ஓடினர். அவர்களை மடக்கிப்பிடித்து போலீசார் கைது செய்தனர். காயம் அடைந்த மாணவர்களை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஜன்பத் சாலை முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.

Tags : Delhi , students, Delhi,police beard, arrested
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...