×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து 5 நாட்களுக்கு 30 ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து 5 நாட்களுக்கு தென் மாவட்டங்களுக்கு 30 ஆயிரம் அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகை நெருங்குகிறது. சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்று கொண்டாடுவது  வழக்கம். இதை முன்னிட்டு சென்னையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு மையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், இந்த மையத்தை நேற்று காலை திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு, கோயம்பேடு பஸ் நிலையம், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரயில் நிலைய பஸ் நிறுத்தம், மாதவரம் புதிய பஸ் நிலையம், பூந்தமல்லி நகராட்சி பஸ் நிலையம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையம் ஆகிய இடங்களில் இருந்து 10ம் தேதி (இன்று) முதல் வரும் 14ம் தேதி வரை 5 நாட்களுக்கு சிறப்பு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு பஸ்கள் இயக்கம் குறித்து 94450 14450, 94450 14436 என்ற செல்போன் எண்கள் மூலம் விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதற்கென 17 முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கு செல்ல சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தற்காலிக பஸ் நிலையங்கள் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை செயல்படும். பொங்கல் பண்டிகை விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கென மொத்தம் 30,120 சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.  பண்டிகை முடிந்து சென்னை திரும்புவோருக்காக மொத்தம் 25,877 பஸ்கள் இயக்க உள்ளோம்.சென்ற ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது 7 லட்சம் பேர் பயணம் செய்தனர். இந்த வருடம் விடுமுறை தினம் அதிகமாக இருப்பதால் கூடுதலாக 2 லட்சம் பேர் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Pongal ,Vijayabaskar Special ,Chennai ,festival , Pongal festival, Chennai, special buses movement, Minister Vijayabaskar
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா