×

சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பொங்கல் பரிசு வழங்க தாமதமானதால் காத்திருந்த பொதுமக்கள் முற்றுகை: நெரிசலில் சிக்கி முதியோர் மயக்கம்

சென்னை: ரேஷன் கடைகளில் சர்வர் கோளாறு காரணமாக பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் வழங்க பலமணி நேரம் காத்திருந்ததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர். நெரிசலில் சிக்கி முதியோர் மயக்கம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 ரொக்கம்  மற்றும் தொகுப்பு பரிசு 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருந்தது. இதன்படி நேற்று தமிழகம் முழுவதும் இந்த ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கும் பணி துவங்கியது. இதன்படி  திருவொற்றியூர், மணலி, மாதவரம் போன்ற பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் முந்திரி திராட்சை சர்க்கரை அடங்கிய பொங்கல்பை மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில்,  திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் அருகே உள்ள குளக்கரை தெருவில் அமைந்துள்ள இரண்டு ரேஷன் கடைகளிலும் ஆயிரம் ரூபாய்  பரிசு வாங்க காலை 6 மணி முதலே குடும்ப அட்டைதாரர்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். காலை 8.30  மணிக்கு தொகுப்பு பரிசு ஒரு சில குடும்ப அட்டைதாரர்கள் கொடுத்தவுடன் திடீரென்று சர்வர் கோளாறு ஏற்பட்டது.  இதையடுத்து  தொகுப்பு மற்றும் ரொக்கம் கொடுப்பது நிறுத்தப்பட்டது. பின்னர் வெகுநேரமாகியும் பணம் கொடுக்காததால் வரிசையில் நின்றிருந்த முதியோர்,பெண்கள் அனைவரும் பெரும் சிரமத்துக்குள்ளானார்கள்.  மேலும் சிறிய இடத்தில் இரண்டு ரேஷன் கடைகளும் செயல்பட்டதால் வெகுநேரம் நெரிசலில் நின்று கொண்டிருந்த சிலர் மயங்கி கீழே விழுந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் எப்போது தொகுப்பு பரிசு வழங்குவீர்கள் என்று கேட்டு அங்கிருந்த ரேஷன் கடை ஊழியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் சுமார் 12 மணிக்கு ஒரு கடை சர்வர் சரிசெய்யப்பட்டு பரிசுத்தொகை விநியோகிக்கப்பட்டது. இன்னொரு கடை சுமார் 2.30 மணிக்கு சர்வர் சரி செய்யப்பட்டு ஆயிரம் ரூபாய் ரொக்கம் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதேபோல் சார்லஸ் நகரிலுள்ள ரேஷன் கடையிலும் 2.30 மணி வரை சர்வர் பழுது காரணமாக  1000 ரூபாய் ரொக்கம், தொகுப்பு வழங்கப்படாததால்  பெண்கள் சுமார் 6 மணி நேரம் காத்திருந்து பின்னர் ரொக்கப்பணம் வாங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இது போல் பல கடைகளிலும் இது போன்ற பிரச்னை இருந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.


Tags : Pongal ,siege ,Retirement , Server disorder, pongal gift, public blockade, elderly delusion
× RELATED கரும்பு நடவில் விவசாயிகள் ஆர்வம்