×

கற்பகநாதர்குளம் கிராமத்தில் கஜா புயலால் உருக்குலைந்த அரசு பாலர் பள்ளி: சீரமைக்காததால் குழந்தைகள் வருகை குறைவு

முத்துப்பேட்டை: கற்பகநாதர்குளம் கிராமத்தில் கஜா புயலால் உருக்குலைந்த அரசு பாலர் பள்ளியை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவாருர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த இடும்பாவனம் ஊராட்சி கற்பகநாதர்குளம் கிராமத்தில் அரசு பாலர் பள்ளி குழந்தைகள் மையம் ஒன்று உள்ளது. இதில் அருகில் உள்ள விவசாய கூலி தொழிலாளர்களின் குழந்தைகள் வந்து செல்கின்றனர். 1975ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளி அன்று முதல் இன்று வரை மிக சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் சென்றாண்டு தாக்கிய கஜா புயலால் உருக்கலைந்தது. இதில் பள்ளி கட்டிடம் சேதமானதுடன் கூரையின் ஒடுகள் புயலின் வேகத்தில் பறந்து வானமே கூறையாக உள்ளது.

அதுமட்டுமின்றி இதன் அருகே இருந்த மரங்களும் விழுந்து இந்த பள்ளி கட்டிடத்தை சூழ்ந்துள்ளது. அதேபோல் கஜா புயலில் அறுந்து விழுந்த மின் கம்பிகள் குப்பை தொட்டிகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் இதனை சூழ்ந்து குப்பை கிடங்கு போல் கிடக்கிறது. இதனால் பள்ளி வளாகத்துக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. கஜா புயல் தாக்கி ஒரு ஆண்டை கடந்தும் இன்னும் இந்த பாலர் பள்ளியை சீரமைக்காததால், தூரத்தில் உள்ள ஒரு அரசு பள்ளியில் உள்ள ஒரு குறுகிய அறையில் இயங்கி வருகிறது. அங்கு போதிய வசதி போதிய இடமில்லாததால் அங்கு குழந்தைகள் படிக்க அவர்களை பராமரிக்க மிகவும் சிரமம் ஏற்படுகிறது.

மேலும் இதனால் குழந்தைகள் எண்ணிக்கையும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் சேதமான இந்த கட்டிடத்தை சீரமைத்து தரக்கோரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு எடுத்து சென்றும் எதுவும் நடைபெறவில்லை. இதனால் அவர்கள் விரக்தியில் உள்ளனர். எனவே இனியும் காலதாமதம் படுத்தாமல் இதனை கவனத்திற்கு எடுத்துக்கு கொண்டு இந்த சேதமான பள்ளியை சீரமைக்க முன்வர வேண்டும் என்று கற்பகநாதர்குளம் பகுதி மக்கள் மற்றும் பள்ளியில் பயிலும் குழந்தைகளின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,storm ,Kaja ,Government , Kalpana Narakulam, Gaja Storm, Government Preschool
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...