×

தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி பெங்களூருவில் துப்பாக்கிகளுடன் 3 தீவிரவாதிகள் அதிரடி கைது: இந்து முன்னணி நிர்வாகி கொலை குற்றவாளிகள் வெளிநாடு தப்பி செல்ல நேரடி உதவி

சென்னை: தமிழகத்தில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய 3 தீவிரவாதிகளை க்யூ பிரிவு போலீசார் பெங்களூருவில் கைது செய்தனர். இந்து முன்னணி நிர்வாகி கொலை குற்றவாளிகள் 3 பேரை வெளிநாடு தப்பி செல்ல நேரடியாக உதவியதும் விசாரணையில் அம்பலமாகி உள்ளது. இந்து முன்னணி திருவள்ளூர் மாவட்ட தலைவராக இருந்தவர் சுரேஷ்குமார் (48). இவர், கடந்த 2014 ஜூன் 18ம் தேதி இரவு அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் உள்ள மாவட்ட இந்து முன்னணி அலுவலகத்தை மூடிவிட்டு வீட்டிற்கு திரும்பும்போது, ஒரு கும்பலால் சரமாரியாக வெட்டி கொல்லப்பட்டார்.

இதில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க, அப்போது அம்பத்தூர் காவல் மாவட்ட துணை கமிஷனராக இருந்த மயில்வாகனன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில், இந்து முன்னணி கூட்டங்களில் சுரேஷ்குமார் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சுதான், கொலைக்கு முக்கிய காரணம் என்று தெரியவந்தது.கொலைக்கு உடந்தையாக இருந்த அம்பத்தூர் பாடியைச் சேர்ந்த நசீர் (28), கடலூர் பரங்கிப்பேட்டையை சேர்ந்த குத்புதீன் (24) ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர்.

விசாரணையில், சுரேஷ் குமாரை கொலை செய்தது சர்வதேச தீவிரவாதிகளுடன் நேரடி தொடர்புடயை கடலூரை சேர்ந்த காஜா மொய்தீன் மற்றும் அவரது நண்பர்கள் சையது அலி நவாஸ் (25), அப்துல்சமீம் (25) ஆகியோர் என தெரியவந்தது. ஆனால், கொலை குற்றவாளிகள் 3 பேரையும் தனிப்படை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. இதற்கிடையே கொலை நடந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த வாரம் சென்னை மாநகர காவல் துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது.

அதில், இந்து முன்னணி மாவட்ட தலைவர் சுரேஷ்குமார் கொலை குற்றவாளிகளான சையது அலி நவாஸ், அப்துல் சமீம், காஜா மொய்தீன் ஆகியோர் புகைப்படங்களை வெளியிட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இவர்கள் குறித்து தகவல் கொடுக்கும் நபருக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும், தகவல் கொடுக்கும் நபரின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. கொலை நடப்பதற்கு முன்பு 3 குற்றவாளிகள் பயன்படுத்திய செல்போன் எண்களை ஆய்வு செய்த போது அடிக்கடி பெங்களூருவை சேர்ந்த முகமது ஹனிப் கான், இம்ரான் கான், முகமது சையது மற்றும் தமிழகத்தை சேர்ந்த 2 பேர் தொடர்ந்து பேசி வந்தது தெரியவந்தது. சம்பந்தப்பட்ட 5 பேரின் செல்போன் எண்களை க்யூ பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

அப்போது, சம்பந்தப்பட்ட 5 பேருக்கும் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளிடம் இருந்து அடிக்கடி அழைப்புகள் வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து கடந்த வாரம் 2 பேரை க்யூ பிரிவு போலீசார் கைது செய்து ரகசியமாக விசாரணை நடத்தினர். அதில், தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 3 பேர் சாலை மார்க்கமாக மேற்குவங்கம் வழியாக வங்கதேசத்திற்கு தப்பி செல்ல உதவி செய்ததும், சுரேஷ்குமார் கொலை குற்றவாளிகளுக்கு போலி முகவரியில் சிம் கார்டு வாங்கி கொடுத்ததும் தெரியவந்தது.

தொடர்ந்து, 3 பேர் தப்பிக்க உடந்தையாக இருந்த பெங்களூருவை சேர்ந்த முகமது ஹனிப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகியோரை க்யூ பிரிவு போலீசார் பெங்களூருவில் நேற்று முன்தினம் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சில வரைபடங்களும் பறிமுதல் செய்தனர். விசாரணையில், தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்களை காரணம் காட்டி மிகப்பெரிய அளவில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடத்த சதி திட்டம் தீட்டியிருந்ததும், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் நேரடி தொடர்பில் இருந்து வந்ததும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கைது ெசய்யப்பட்ட 3 தீவிரவாதிகளையும் க்யூ பிரிவு போலீசார் சென்னை அழைத்து வந்து, எழும்பூரில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரணை நடத்த க்யூ பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர். தீவிரவாதிகள் 3 பேர் தப்பிக்க உடந்தையாக இருந்த பெங்களூருவை சேர்ந்த முகமது ஹனிப் கான், இம்ரான் கான், முகமது சையது ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


Tags : Militants ,Assassination ,Bangalore , Tamil Nadu attack, conspiracy, Bangalore, gun, 3 militants, arrested
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி