பழநி: பழநி கோயிலில் சிறப்பு தரிசனம் செய்வதற்கு அமைச்சர்கள் வழங்கும் அதிகளவிலான பரிந்துரை கடிதங்களால் அதிகாரிகள் கலங்கி போய் உள்ளனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். கார்த்திகை மற்றும் வார விடுமுறை நாட்களிலும், தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மலைக்கோயில் இலவச தரிசனம் மற்றும் கட்டண தரிசன வரிசைகளில் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதுபோல் முக்கிய பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், நீதிபதிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் போன்றோருக்கு சிறப்பு அனுமதி கடிதம் வழங்கப்படும். இதன்மூலம் விரைவில் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக முக்கிய பிரமுகர்களுக்கு கோயில் நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வந்த சிறப்பு அனுமதி கடிதத்தை பலர் முறைகேடாக பெற்று தரிசனத்திற்கு அழைத்து சென்று பணம் பார்த்து வந்தனர். கடந்த ஆங்கில புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வரும் வழியில் ஏராளமானோர் உள்ளே புகுந்து விட்டதால் அங்கு களேபரமான சூழல் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து கோயில் நிர்வாகம் சிறப்பு அனுமதி கடிதம் வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. இதன் காரணமாக தற்போது பெரிய அளவில் முறைகேடுகள் தடுக்கப்பட்டுள்ளன. ஆனால், கோயில் நிர்வாகத்திற்கு அமைச்சர்கள் தரும் பரிந்துரை கடிதங்கள் நாள்தோறும் மலைபோல் குவிந்து விடுவதால் கோயில் அதிகாரிகள் செய்வதியாது திகைத்து போய் உள்ளனர்.
இதுகுறித்து கோயில் ஊழியர்கள் சிலர் கூறியதாவது, ‘பழநி கோயில் நிர்வாகத்தால் சிறப்பு அனுமதி கடிதம் வழங்குவது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வழங்கும் பரிந்துரை கடிதங்கள் குறைவில்லாமல் நாள்தோறும் மலைபோல் குவிந்து கிடக்கிறது. நாளொன்றிற்கு 300 சிறப்பு அனுமதி மட்டுமே வழங்கப்பட வேண்டுமென உயர் அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், அமைச்சர்களின் பரிந்துரை கடிதங்கள் அளவில்லாமல் வருகிறது. அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பரிந்துரை கடிதங்கள் வழங்குவதை முறைபடுத்தி கொண்டாலே பக்தர்கள் இடையூறின்றி சாமி தரிசனம் செய்யலாம்’ என்றனர்.
