×

அரசுக்கு நிலம் கொடுத்ததற்காக ஆசிரியர் வேலையில் ஒதுக்கீடு கேட்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொதுப்பயன்பாட்டுக்காக அரசு நிலத்தை கையகப்படுத்தும்போது நிலத்தின் உரிமையாளர் அதற்காக வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த ஆர்.அப்துல்காதர் தாக்கல் செய்த மனுவில், ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆசிரியர் தேர்வாணையம் சமீபத்தில் அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இதில் முன்னுரிமைக்கான ஒதுக்கீடு எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த 1978 டிசம்பர் 18ம் தேதியிட்ட அரசாணையில், பொதுப் பயனுக்காக அரசு நிலம் கையகப்படுத்தும்போது நிலத்தின் உரிமையாளருக்கு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு தரப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த ஒதுக்கீடு அனைத்து துறைகளின் வேலைவாய்ப்பிலும் தரப்படுகிறது.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் இந்த ஒதுக்கீட்டை அறிவிப்பாணையில் சேர்க்கவில்லை. எனவே, இந்த அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும். முன்னுரிமை சான்றிதழ் வைத்திருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தருமாறு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு: ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பில் முன்னுரிமை சான்றிதழ் வைத்திருப்பவருக்கு ஒதுக்கீடு தரவேண்டும் என்று மனுதாரர் கட்டாயப்படுத்த முடியாது. அது மனுதாரருக்கு தரப்பட்டுள்ள அரசியலமைப்பு உரிமை என்றும் கூற முடியாது. பணியின் தன்மை பொருத்து எந்த அடிப்படையில் ஒதுக்கீடு தரவேண்டும் என்று சம்மந்தப்பட்ட தேர்வு வாரியம்தான் முடிவு செய்ய முடியும். அந்த வாரியத்தை கட்டாயப்படுத்தி ஒதுக்கீடு கோர முடியாது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


Tags : Teachers ,Madras High Court ,state land , Government, Land, Teacher's Work, Allocation, Madras High Court, Order
× RELATED எந்த அறிவியல்பூர்வமான ஆய்வும்...