1000 இடங்கள் காலியாக இருந்தும் பணி நியமனம் இல்லை டிபிஐயில் ஆசிரியர்கள் முற்றுகை போராட்டம்

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் 1000 உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருந்தும், போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்காமல் ஆசிரியர் தேர்வு வாரியம் மவுனமாக உள்ளது. இதையடுத்து உடற்கல்வி ஆசிரியர்கள் சென்னையில் முற்றுகையில் ஈடுபட்டனர். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்காமல் இருப்பதை அடுத்து 100க்கும் மேற்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலம் முன்பு நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் டிபிஐ வளாகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த முற்றுகை போராட்டம் குறித்து உடற்கல்வி சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தங்கேஸ்வரன் கூறியதாவது:

பள்ளிக் கல்வித்துறையில் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை காலியாக உள்ள 663 உடற்கல்வி ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப 2017ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் ேர்வு நடத்தப்பட்டது. இந்த போட்டித் தேர்வை உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட பாடப் பிரிவுகளை சேர்ந்தவர்கள் தேர்வு எழுதினர். இந்த தேர்வு முடிவில் தகுதி பெற்றவர்கள் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் 2018 அக்டோபர் மாதம் வெளியிட்டது. அதில் 532 பேர் தகுதி பெற்றுள்ளோம். ஆனால் இதுவரை எங்களுக்கு பணி நியமனம் வழங்கவில்லை. இது தொடர்பாக பலமுறை சம்பந்தப்பட்ட துறை அமைச்சரை பார்த்தோம். அப்போதெல்லாம் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் உள்ள வழக்கு குறித்து தெரிவித்து கால தாமதம் செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி அந்த வழக்கில் தீர்ப்பு வெளிவந்துள்ளது. அதனால் ஆசிரியர் தேர்வு வாரிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று தகுதிப் பட்டியலில் இடம் பெற்றுள்ள எங்களுக்கு பணி நியமனம் வழங்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட வேண்டும் என்று கேட்டுவருகிறோம். நாங்கள் இதுகுறித்து பலமுறை கோரிக்கை  வைத்தோம். அப்போதெல்லாம், விரைவில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து வந்தனர். ஆனால் அதன்படி அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களோடு தேர்வு எழுதிய தையல், ஓவியம், இசை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல உடற்கல்வி ஆசிரியர்களுக்கும் பணி நியமனம் வழங்க வேண்டும்.இவ்வாறு தங்கேஸ்வரன் கூறினார்.

உடற்கல்வி சிறப்பு ஆசிரியர்கள் பிரச்னை குறித்து கல்வி அதிகாரிகள் கூறும் போது, பள்ளிக் கல்வித்துறை, தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் உயர்நிலை, மேனிலை, நடுநிலைப் பள்ளிகளில் 1000 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே நீண்ட நாட்களாக இருக்கின்றன. அந்த இடங்களில் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று துறை சார்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து இதுவரை தகுதியானவர்கள் பட்டியல் வரவில்லை. பட்டியல் வந்தால் நியமிப்போம். பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் தேவையும் உள்ளது. அதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் தான் பட்டியல் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், டிபிஐயில் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், ஒருங்கிணைப்பாளர்களை ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் அறிவொளியுடன் சந்திக்க வைத்தனர். அவர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் இரண்டு மாதத்தில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதிப் பட்டியல் பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்பி வைப்போம் என்று இயக்குநர் அறிவொளி தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிஜிதாமசையும் ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்து பேசினர். உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று துறை சார்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து இதுவரை தகுதியானவர்கள் பட்டியல் வரவில்லை.

Tags : TPI , 1000 seats vacant, hired, TBI, teachers, blockade, struggle
× RELATED தேமுதிகவும் சீட் கிடைக்குமா என...