×

ஆக்கிரமிப்புகளும் அதிகரிப்பு சுகாதாரக்கேடுக்கு சிவகாசியில் பஞ்சமில்லை: ஆய்வுக்கு வருவாரா நகராட்சி ஆணையாளர்?

சிவகாசி: சிவகாசி நகராட்சி பகுதி மக்கள் ஆக்கிரமிப்பு, சுகாதார கேட்டினால்   கடும் அவதிப்படுகின்றனர்.  புதிதாக பொறுப்பேற்றுள்ள நகராட்சி ஆணையாளர்  குப்பை, வாறுகால்,  ஆக்கிரமிப்பு அகற்றும் பணி குறித்து ஆய்வு செய்யாமல் அலுவலக அறையிலேயே அமர்ந்து பணிபுரிவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.     சிவகாசி நகராட்சி பகுதியில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நகரை சுற்றியுள்ள கிராம ஊராட்சி பகுதிகளிலும் குடியிருப்புகள் அதிகளவில் உள்ளன. சிவகாசி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் தொகை அதிகரித்து கொண்டே செல்வதால் சிவகாசி நகர் பகுதிக்கு வந்து செல்லும் மக்கள் கூட்டம்  அதிகரித்து வருகிறது.   வாகன பெருக்கத்தால் தினமும் சிவகாசி நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது.  சிவகாசி நகரில் உள்ள முக்கிய வீதிகளான கீழரத வீதி, மேல ரதவீதி, தெற்கு ரத வீதி, வடக்கு ரத வீதி பகுதிகளில் வணிக நிறுவனங்கள், கடைகள், அதிகளவில் புதிது புதிதாக திறக்கப்படுகிறது. இந்த கடைகளுக்கு முன்பு போதிய இட வசதி இல்லாததால் சாலையை ஆக்கிரமித்து ஸ்டால்கள், தட்டி போர்டுகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனால் நகர் பகுதிக்கு டூவீலர், கார்களில் வருவோர் சாலையை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இது போன்ற நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காலை, மாலை பள்ளி நேரங்களில் இந்த பகுதிகளை கடந்து செல்வதே மாணவர்களுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. நகரில் ஆங்காங்கே வாறுகால் கழிவுநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதால் கடும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு வருகிறது. குப்பை அகற்றும் பணியும் முறையாக நடைபெறாததால் நோய்கள் பரவும் ஆபத்து உள்ளது. சிவகாசி பஜார் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், கடைகளை அகற்றக்கோரி பல முறை முறையிட்டும்  அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சிவகாசி நகரில் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு கடைகள், கட்டிடங்கள் அதிகரித்து கொண்டே செல்கிறது.  சிவகாசி நகராட்சி பகுதியில்  புதிதாக தொடங்க படும் வணிக நிறுவனங்கள் பார்க்கிங் வசதி இல்லாமல் துவங்கப்படுகிறது. இந்த வணிக நிறுவனங்கள், கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் கடும் இடநெருக்கடியால் நகருக்குள் வந்து செல்ல பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

மக்கள் கூறுகையில், ‘‘திருவிழா மற்றும் விசேஷ தினங்களில் சிவகாசி நகருக்குள் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் வாகன பெருக்கத்தால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி மணிக்கணக்கில் காத்திருந்து நகரை விட்டு வெளியே செல்லும் நிலைமை உள்ளது. தற்போது சிவகாசி நகராட்சி ஆணையாளராக கிருஷ்ணமூர்த்தி புதிதாக பொறுப்பேற்றுள்ளார். இவர் சுகாதார பணிகளை தினமும் கண்காணிப்பதில்லை. இதே போன்று ஆக்கிரமிப்பு அகற்றும் குறித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அலுவலக அறைக்குள்ளேயே அமர்ந்து பணிபுரிந்து வருகிறார். எனவே நகராட்சி ஆணையாளர் சிவகாசி நகராட்சி பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொண்டு மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.


Tags : Sivakasi , Sivakasi, famine, health, sector
× RELATED சிவகாசியில் பட்டாசு மூலப்பொருள் உற்பத்தி குடோனில் பயங்கர வெடி விபத்து