×

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வு வீடு வீடாக சென்று பாஜ பிரசாரம்: டெல்லியில் அமித்ஷா தொடங்கி வைத்தார்

புதுடெல்லி: குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, 3 கோடி குடும்பங்களை சந்திக்கும் பாஜ.வின் திட்டத்தை டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகள் உட்பட பல்வேறு அமைப்புகளும் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றன. அதேநேரம், இந்த சட்டத்துக்கு ஆதரவாக பாஜ.வும் பேரணிகள் நடத்தி வருகிறது. மேலும், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு பிரசாரத்தை முறியடிக்கவும், இச்சட்டம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நாடு முழுவதும் 3 கோடி குடும்பங்களை சந்திக்கும் ‘ஜன் ஜாக்ரன்’ திட்டத்தை ஜனவரி 5ம் தேதி முதல் நடத்தப் போவதாக பாஜ அறிவித்தது.

அதன்படி, டெல்லியில் இத்திட்டத்தை பாஜ தேசிய தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து, லஜ்பத் நகரில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து விளக்கமும் அளித்தார். பாஜ,வின் சிறப்பு இலவச மொபைல் எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்து இச்சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும்படியும் மக்களை கேட்டுக் கொண்டார். இதேபோல், பல்வேறு மாநிலங்களில் பாஜ மூத்த தலைவர்கள் இந்த பிரசாரத்தை நேற்று தொடங்கி வைத்து, மக்களை வீடு வீடாக சந்தித்து விளக்கம் அளித்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மகாராஷ்டிராவில் நிதின் கட்கரி மற்றும் இதர மாநிலங்களில் பாஜ செயல் தலைவர் ஜேபி.நட்டா, அந்தந்த மாநில பாஜ தலைவர்கள், முதல்வர்கள், கர்நாடகாவில் முதல்வர் எடியூரப்பா, உள்ளிட்டோர் தொடங்கி வைத்தனர். இந்த பிரசாரம் வரும் 15ம் தேதி வரை, மொத்தம் 10 நாட்கள் நடக்க உள்ளது.

‘மக்களை ராகுல், பிரியங்கா தவறாக வழி நடத்துகிறார்கள்’
‘ஜன் ஜாக்ரன்’ திட்டத்தை டெல்லியில் தொடங்கி வைத்த பிறகு அமித்ஷா அளித்த பேட்டியில், ‘‘மூன்று அண்டை நாடுகளில் மத துன்புறுத்தலை எதிர்கொண்ட சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்குவதற்காகத்தான் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தினால் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரும் தங்கள் குடியுரிமையை இழக்க மாட்டார்கள். பிரதமர் மோடி தலைமையில், டெல்லியில் பாஜ ஆட்சியை கைப்பற்றும். காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தியும், பிரியங்காவும் குடியுரிமை திருத்த சட்ட விவகாரத்தில் மக்களை தவறாக வழி நடத்துகிறார்கள்,’’ என்றார்.

Tags : Delhi Amit Shah , Citizenship Amendment Act, Awareness, Home, Baja Promotion, Delhi, Amit Shah
× RELATED குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு...