×

மாநகராட்சி 15வது மண்டலத்தில் வீடுகளுக்கு சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு

* ஆளும்கட்சியினர் அத்துமீறல்
* பொதுமக்கள் குற்றச்சாட்டு

துரைப்பாக்கம்: மாநகராட்சி 15வது மண்டலத்தில் உள்ள வீடுகளுக்கு சட்ட விரோத கழிவுநீர் இணைப்பு கொடுத்து, ஆளும்கட்சியினர் வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை மாநகராட்சி, 15வது மண்டலம், 195வது வார்டுக்கு உட்பட்ட ஒக்கியம்பேட்டை, நேரு நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றன. ஊராட்சியாக இருந்த இப்பகுதி கடந்த 2011ம் ஆண்டு மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது. இப்பகுதி ஊராட்சியாக இருந்தபோது குடிநீர், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டன. ஆனால், பாதாள சாக்கடை வசதி செய்து தரப்படவில்லை. இந்நிலையில், இப்பகுதி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பின்னர் பாதாள சாக்கடை வசதி செய்து தர வேண்டும், என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இப்பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தனர்.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால், வீடுகளில் சேரும் கழிவுநீரை தொட்டியில் தேக்கி, பின்னர் கட்டணம் செலுத்தி, தனியார் லாரிகள் மூலம் கழிவுநீரை அகற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக ஆளும்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இப்பகுதியில் சாலையோரம் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி, பெரிய அளவிலான பிளாஸ்டிக் குழாய் அமைத்து அங்குள்ள வீடுகளில் ஒவ்வொன்றுக்கும் தலா ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெற்றுக்கொண்டு கழிவுநீர் இணைப்பு கொடுத்து வருகின்றனர். இவ்வாறு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை பிளாஸ்டிக் குழாய் மூலம் சட்டத்திற்குப் புறம்பாக அங்குள்ள சதுப்பு நிலத்தில் விடுகின்றனர்.

கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் கழிவுநீர் இணைப்பு கொடுத்து, ஆளும்கட்சியினர் பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடுவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படி கழிவுநீரை திறந்தவெளியில் வனத்துறைக்கு சொந்தமான சதுப்பு நிலத்தில் விடுவதால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, இதுகுறித்து மாநகராட்சி, வனத்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘எங்களது பகுதிக்கு பாதாள சாக்கடை வசதி வேண்டும், என பல ஆண்டாக வலியுறுத்தி வருகிறோம். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இப்பகுதி மக்களிடம் அனைத்து வரிகளையும் தவறாமல் வசூலிக்கும் மாநகராட்சி நிர்வாகம், அடிப்படை வசதிகளை மட்டும் செய்து தர மறுக்கிறது. இங்கு பாதாள சாக்கடை வசதி இல்லாததால், வீடுகளில் தொட்டி அமைத்து அதில் கழிவுநீரை சேகரித்து, கட்டணம் செலுத்தி தனியார் லாரிகள் மூலம் அகற்றும் நிலை உள்ளது. தற்போது, ஆளும்கட்சியினர் சாலையோரம் பிளாஸ்டிக் குழாய் பதித்து வீடுகளுக்கு சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்பு வழங்கி வருகின்றனர்.

இவ்வாறு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் விடப்படுகிறது. இதற்கு வனத்துறை தடை விதித்தால், பொதுமக்களிடம் வசூல் செய்த பணம் என்னவாகும் என்பது கேள்விக்குறியே. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு நேரில் ஆய்வு செய்து, சட்ட விரோத கழிவுநீர் இணைப்புகளை துண்டித்து, முறையாக பாதாள சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர். வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் விடப்படுகிறது. இதற்கு வனத்துறை தடை விதித்தால், பொதுமக்களிடம் வசூல் செய்த பணம் என்னவாகும் என்பது கேள்விக் குறியே.

Tags : Zone ,Corporation , Corporation, 15th Zone, House, Illegal, Sewerage, Link
× RELATED அரசு பஸ் டிரைவர்களுக்கு சர்க்கரை கரைசல் வழங்கல்