பைக் விபத்தில் உயிரிழந்தவரின் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ.25.82 லட்சம் இழப்பீடு: நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பைக் மோதி இறந்த ரியல் எஸ்டேட் ஏஜென்டின் குடும்பத்திற்கு ரூ.25.82 லட்சம் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்தவர் எஸ்.நாகராஜ் (44). ரியல் எஸ்டேட் ஏஜென்டாக வேலை செய்து வந்தார். இவர், கடந்த 2015 ஆகஸ்ட் 19ம் தேதி, சிடிஎச் சாலை பிருந்தாவன் காலனி அருகே நடந்து சென்றபோது, அதிக வேகமாகவும், சாலை விதி மீறியும் பைக் ஒன்று வந்துள்ளது. அந்த பைக் திடீரென நாகராஜ் மீது மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் தனது கணவரின் இறப்பிற்கு, இழப்பீடு வழங்க கோரி, நாகராஜின் மனைவி கலைசெல்வி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.உமாமகேஷ்வரி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, ‘மனுதாரரின் கணவர் சாலை விதிகளை மதிக்காமல், திடீரென சாலையை கடந்துள்ளார். அப்போது விபத்து நடந்துள்ளது. எனவே, விபத்திற்கு மனுதாரரின் கணவர்தான் காரணம்’ என, பைக்கின் இன்சூரன்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாட்சிகள், போலீஸ் எப்.ஐ.ஆர்., உடற்கூறு ஆய்வு சான்றிதழ் அனைத்தையும் பார்க்கும் போது, மனுதாரரின் கணவர் இறப்பிற்கு, அதிக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும், பைக்கை ஓட்டியதே காரணம் என்பது நிரூபணமாகிறது. எனவே மனுதாரருக்கு இழப்பீடாக, ரூ.25.82 லட்சம் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Tags : deceased ,bike accident , Bike accident, casualty, family, Rs.25.82 lakh, compensation, court
× RELATED சசிகலாவின் பினாமி பெயரில் உள்ள 1,500...