×

பொழிச்சலூரில் துப்புரவு பணி சுணக்கம் சுகாதார கேடால் தவிக்கும் மக்கள்: அதிகாரிகள் மெத்தனம்

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் ஊராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இங்கு 354 தெருக்களும், அவற்றில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இப்பகுதி மக்கள் கொடுக்கும் வரி வருவாய் மூலம், அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஆனால், ஊராட்சி நிர்வாகம் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக துப்புரவு பணி முறையாக நடைபெறாததால், தெருக்களில் குப்பை குவிந்துள்ளன. கள்ளியம்மன் நகர், வெங்கடேஸ்வரா நகர் மற்றும் பவானி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் தொட்டிகள் வைக்கப்படாததால், மக்கள் குப்பையை சாலையோரம் வீசிச் செல்லும் நிலை உள்ளது.

இதனை துப்புரவு பணியாளர்கள் தினமும் அகற்றாததால் குப்பை குவியலாக காட்சியளிப்பதுடன், கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனை மாடு, நாய், பன்றி கிளறுவதால் சாலையெங்கும் குப்பை சிதறி, பொதுமக்களுக்கு நோய் பரவும் இடமாக மாறி வருகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பேரூராட்சிக்கு நிகரான மக்கள் தொகை கொண்ட பொழிச்சலூர் ஊராட்சியில் சமீப காலமாக ஊராட்சியின் நிர்வாகத்திறமை முற்றிலும் செயலிழந்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தினமும் சொல்லொன்னா துயரத்திற்கு ஆளாகி வருகிறோம். ஒரே ஒரு டிராக்டரை மட்டுமே வைத்து தெருவெங்கும் குப்பைகளை அள்ளுவது போல் ஊராட்சி நிர்வாகம் பாசாங்கு செய்து வருகிறது.

மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு தகுந்த ஊதியம் வழங்கப்படுவது இல்லை, என்று கூறப்படுகிறது. இதனால் குப்பைகளை அள்ளுவதற்கென்று நிலையான ஊழியர்கள் இல்லாமல், குப்பைகளை கையாள்வதில் சிரமம் ஏற்படுகிறது. இதனால், வீட்டை விட்டு வெளியே வந்தாலே, மூக்கைப் பிடித்துக் கொண்டு செல்லும் நிலை உள்ளது. குடியிருப்புகள் அருகே தேங்கியுள்ள குப்பை கழிவுகளால் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் வசிக்கிறோம். கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் டெங்கு நோய் பாதிப்பு அதிகம் ஏற்பட்ட பகுதி இதுதான். ஆனால், தற்போது வரை ஊராட்சி நிர்வாகம் சுகாதார பணிகளை மேற்கொள்ளாமல் மெத்தன போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால், மர்ம காய்சல் பீதியில் வசித்து வருகிறோம். நோய்கள் வந்த பிறகு, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதை காட்டிலும், ஆரம்பத்திலேயே சுற்றுப்புறத்தை சுத்தப்படுத்தி சுகாதார சீர்கேடு ஏற்படாமல் தடுத்து, கொடிய நோய்கள் பரவுவதில் இருந்து பொதுமக்களை காக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : sanitation workers , Shower, Cleaning, Accounting, Health Catal, People, Officers, Meditation
× RELATED நெல்லை மாநகராட்சியில் தூய்மைப்...