×

சென்னை மாநகர காவல் நிலையங்களில் குண்டாஸ் வழக்கு செலவுக்கான தொகை ஓராண்டாக நிறுத்தம்: இன்ஸ்பெக்டர்கள் அவதி

பெரம்பூர்: சென்னையில் அதிகரித்து வரும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் சிறையில் அடைத்து வருகின்றனர். இவ்வாறு, சிறையில் அடைக்கப்படும் குற்றவாளிகள் ஒரு வருடத்திற்கு ஜாமீனில் வெளியே வர முடியாது. ஆனால், தற்போது குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்படும் சிலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் குண்டர் தடுப்பு சிறப்பு  நீதிமன்றத்தில் வாதாடி 3 அல்லது 5 மாதங்களில் வெளியே வருவதை காணமுடிகிறது.

ஒருவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க பல்வேறு வழிமுறைகளை போலீசார் கையாள வேண்டியுள்ளது. குறிப்பாக, பேப்பர் ஒர்க் எனப்படும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட விவரங்களை தனித்தனியாக ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும். நீதிபதிக்கு ஒரு நகல், குற்றவாளிக்கு ஒரு நகல், உயரதிகாரிகளுக்கு ஒரு நகல் என பல பிரதிகள் எடுக்க வேண்டி உள்ளதால், ஒரு நபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க 7 புத்தகங்களில் இருந்து 12 புத்தகங்கள் வரை தோராயமாக தயார் செய்ய  வேண்டியுள்ளது.

இதுதவிர ஆவணங்களை திரட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை செலவாகிறது. அவ்வாறு செலவிடப்படும் தொகையை சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஏற்கவேண்டும். பின்னர் ஒரு குண்டர் தடுப்பு சட்டத்திற்கு ரூ.8 ஆயிரம் வீதம் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கணக்கு காண்பித்து ஆய்வாளர் பெற்றுக்கொள்ளலாம். கடந்த 2, 3 வருடங்களுக்கு முன், ஆய்வாளர்களின் கையில் நேரடியாக வழங்கப்பட்டு வந்த இந்த பணம், தற்போது அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.

சம்பந்தப்பட்ட ஆவணங்களை குறிப்பிட்ட அந்த ஆய்வாளர் அவர்களது காவல் கட்டுப்பாட்டு எல்லைக்கு உட்பட்ட இணை ஆணையரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர் மூலமாக கமிஷனர் பரிந்துரையின் பேரில் சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களுக்கு அந்த தொகை வழங்கப்படும். மூன்று மாதம் முதல், ஆறு மாதத்திற்குள் அந்த தொகை வழங்கப்பட்டு விடும். இதன் மூலம் சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள், ஆவணங்களை நகல் எடுக்கும் கடைகளுக்கு பணம் செலுத்தி வந்தனர். தற்போது, இந்த பணம் முறைப்படி ஆய்வாளர்களுக்கு வழங்கப்படாததால், ஆவணங்களை நகல் எடுக்கும் கடைக்காரர்களுக்கு பணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2018 -19ம் ஆண்டு சென்னையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனால், அந்த சட்டத்தை பயன்படுத்தி செலவு செய்த ஆய்வாளர்களுக்கு அதற்கான பணம் இதுவரை முழுமையாக கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்தாண்டு சென்னையில் பல காவல் மாவட்டங்களில் அதிகப்படியான குற்றவாளிகள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு ஆய்வாளர் ஆண்டுக்கு 20 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைத்து இருந்தாலும்கூட அவருக்கு ஒரு குண்டர் தடுப்புச் சட்டத்தில் ரூ.8 ஆயிரம் வீதம் 20 பேருக்கு ரூ.1.6 லட்சம் வழங்கி இருக்க வேண்டும்.

ஆனால், பெரும்பாலான ஆய்வாளர்களுக்கு 2018-19ம் ஆண்டுக்கான குண்டர் தடுப்பு சட்ட செலவு தொகை வழங்கப்படவில்லை. சில ஆய்வாளர்களுக்கு ரூ.5 லட்சம் வரை கூட பாக்கி வைத்துள்ளனர் என கூறபடுகிறது. இதுகுறித்து பெயர் கூற விரும்பாத சென்னை ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், ‘‘ஆரம்பத்தில் ஜெராக்ஸ் கடைக்காரர்களிடம் கடன் வைத்து குண்டர் தடுப்பு சட்ட விவரங்களை புத்தகம் புத்தகமாக அச்சடித்து வந்தோம். அவர்களுக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை பணம் கொடுத்து வந்தோம். நாளடைவில் அதிக நபர்களை குணடர் தடுப்பு சட்டத்தில் அடைக்க நேரிட்டதால் அவர்கள் கடன் தர மறுக்கின்றனர்.

இதனால், நாங்கள் எங்களது பணத்தை எடுத்து ஜெராக்ஸ் கடைக்காரர்களுக்கு பாக்கி வைக்காமல் கொடுத்து வந்தோம். கடந்த 2018-19ம் ஆண்டில் இந்த பணம் சரிவர வரவில்லை. கணக்கை தயார் செய்து கொடுத்துவிட்டு பணம் எப்போது வருமோ என காத்துக் கொண்டிருக்கிறோம். இவ்வாறு பணம் வருவது தாமதமாவதால், சில ஆய்வாளர்கள் குண்டர் சட்டம் பயன்படுத்துவதை குறைத்து வருகின்றனர். எனவே, குண்டர் சட்டத்துக்கான செலவு தொகையை உடனடியாக வழங்க காவல் ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Tags : police stations ,Chennai Municipal ,Chennai Municipal Police Station , Chennai, Municipal Police Station, Gundas Case, Cost, Parking, Inspectors, Awadhi
× RELATED சென்னையில் போலீசார் தபால் வாக்கு...