×

பொழிச்சலூர் ஊராட்சி அலட்சியம் தெருக்களில் குப்பை குவியல்: நோய் பிடியில் மக்கள்

பல்லாவரம்: பொழிச்சலூர் ஊராட்சியில் தெருவெங்கும் குப்பை குவிந்துகிடப்பதால் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும் ஆபத்துள்ளது. சென்னை பொழிச்சலூர் ஊராட்சியில் உள்ள 5 வார்டுகளில் 354 தெருக்கள் உள்ளன. 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பொழிச்சலூர் முழுவதும் துப்புரவு பணிகளை ஊராட்சி நிர்வாகம் முறையாக மேற்கொள்ளாததால் தெருக்களில் குப்பை குவிந்துகிடக்கிறது. குறிப்பாக, கள்ளியம்மன் நகர், வெங்கடேஸ்வரா நகர், பவானி நகர் பகுதிகளில் பிரதான சாலைகளில் குப்பை தொட்டிகள் இல்லாததால் அப்பகுதி மக்கள், தங்களது வீடுகளில் சேரும் குப்பையை தெருவில் வீசுகின்றனர். ஆனால் இந்த குப்பையை ஊராட்சி நிர்வாகம் சரியாக அள்ளாததால் குப்பை குவிந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்களுக்கு பல்வேறு உடல்உபாதைகள் ஏற்பட்டு அவதியுறுகின்றனர். தேங்கிக் கிடக்கும் குப்பையை கால்நடைகள் கிளறுவதால் காற்றில் பறந்து வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் ஊராட்சி செயலர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘’பொழிச்சலூர் ஊராட்சி நிர்வாகம் முற்றிலும் செயலிழந்து காணப்படுகிறது. ஒரு டிராக்டர் வைத்துக்கொண்டு குப்பையை அள்ளுகின்றனர். துப்புரவு பணியாளர்களுக்கு முறையான ஊதியம் வழங்கப்படாததால் சரிவர பணிகள் மேற்கொள்வது கிடையாது. கடந்தாண்டு எங்கள் பகுதியில்தான் முதலில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. மக்கள்  தெரிவிக்கும் புகார் மீது ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பது கிடையாது. எனவே,  உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Tags : streets ,Paichichalur , Shower, panache, garbage, disease
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...