×

ஓசி பிரியாணி கொடுக்காத கடைக்கு ரூ.5000 அபராதம் போட்ட கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நீதிமன்றத் தீர்ப்பையும் மதிக்காமல் அரசு ஆணையையும்  மதிக்காமல் காவல்துறை செயல்படுகிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘காவல்துறை வட்டாரத்தில் விளையாட்டுத்துறையில் தேசிய அளவில் பதக்கம் வென்றவர்களுக்கு உரிய மரியாதை அளித்து அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் இந்த நடைமுறையை காவல்துறை வட்டாரத்தில் உள்ளவர்கள் முறையாக பின்பற்றுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்காக பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் சென்று அதன் மூலமே பதவிஉயர்வு பெற்று வருகின்றனர். அப்படி நீதிமன்றம் சென்று பதவி உயர்வு வழங்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியும்  பல பேருக்கு இதுவரை பதவி உயர்வு கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அந்த வகையில் 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த பெண்மணி ஒருவர் துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இதேபோன்று  2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த  30க்கும் மேற்பட்டோர் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கி காவல்துறையில் பதவி உயர்வுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் இதுவரை இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை. தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்றால்   பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்பது அரசாணையில் உள்ளது. ஆனால் இதுவரை காவல்துறை உயரதிகாரிகள் இதை கண்டுகொள்ளவில்லை. ஒருசிலர் நீதிமன்றத்திற்குச் சென்று நீதிமன்ற ஆணையை வாங்கிய பிறகும் பதவி உயர்வு கிடைக்காமல் போராடி வருகின்றனர்.  அந்த வகையில் துப்பாக்கி சுடும் போட்டியில் தேசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற பெண்மணி ஒருவர் தனக்கு உதவி ஆய்வாளர் பதவி தரவேண்டும் என நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்றமே 2016ம் ஆண்டு இவருக்கு சாதகமாக தீர்ப்பளித்துள்ளது. ஆனால் இதுவரை இவருக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை, நீதிமன்றத் தீர்ப்பை காவல்துறையினரே  மதிப்பது இல்லை என்பதற்கு இதுவும் ஓர் உதாரணமாக திகழ்கிறது. இவரைப் போன்று காவல்துறையில் விளையாட்டு பிரிவில் சாதித்த பலரும்  நீதிமன்றத்தை நாட தயாராகி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘ஓசியில் பிரியாணி கொடுக்காததால் ஓட்டலில் 5 ஆயிரம் அபராதம் வசூலித்தார்களாமே அதிகாரிகள்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரிப்பால் கடலோர மாவட்டத்தில் நகராட்சி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பைக்கில் முகக்கவசம் அணியாமல் வருபவர்கள், முகக்கவசம் அணியாமல் பஸ்சில் பயணம் செய்பவர்கள் என அனைவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறதாம்… இந்த சோதனைக்கு இடையில் பஸ் ஸ்டாண்டு அருகே உள்ள ஒரு அசைவ ஓட்டலுக்குள் நேற்றுமுன்தினம் திடீரென புகுந்த நகராட்சி ஆணையர் தலைமையிலான அதிகாரிகள் ஓட்டலுக்குள் இருந்த பிளாஸ்டிக் பைகளை அள்ளினர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத காரணத்தால் ஓட்டலுக்கு ₹5 ஆயிரம் அபராதம் விதிப்பதாக கூறிய அதிகாரிகள், அதற்குரிய ரசீதை ஓட்டல் கல்லாப்பெட்டியில் இருந்தவரிடம் கொடுத்தார்களாம்… கல்லாப்பெட்டியில் இருந்தவர் இப்பொழுது தான் கடையே திறந்துள்ளேன். அதற்குள் ₹5 ஆயிரம் அபராதம் என்றால் எப்படி கட்ட முடியும் என புலம்பினாராம்… உடனே அதிகாரிகள், பணம் இல்லையென்றால் முதல் நாளில் விற்பனை செய்த பணம் இருக்கும். அந்த பணத்தை அபராத தொகையாக செலுத்தி விட்டு கடையை நடத்துங்க என கறாராக கூறி விட்டார்களாம்… கல்லாப்பெட்டியில் இருந்தவர் வேறுவழியின்றி ₹5ஆயிரம் அபராத தொகையை செலுத்தினாராம்.. 2 தினங்களுக்கு முன்பு ஓசியில் கேட்ட பிரியாணியை கொடுத்து இருந்தால் ₹5 ஆயிரம் அபராதம் செலுத்தியிருக்க வேண்டாமே… என கல்லாவில் இருந்தவர் அங்கிருந்த ஓட்டல் ஊழியர்களிடம் புலம்பினாராம்’’ என்றார் விக்கியானந்தா.

  ‘‘பொருட்காட்சி வசூல் வேட்டை போச்சே என புலம்புகிறார்களாமே..’’

 ‘‘கொரோனா இரண்டாம் அலை காரணமாக, பொதுமக்கள் கூட்டம் கூடும் திருவிழா, மத விழாக்களுக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. கிராம திருவிழா, தெருவில் உள்ள கோயில் விழா கூட கொண்டாட முடியாமல், இதற்கு விதிவிலக்கு கோரி பொதுமக்கள் தினமும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 20ம் தேதிக்கு பின் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் 45 நாட்கள் பொருட்காட்சி நடைபெறும். இதில், இத்துறை அதிகாரிகளுக்கு டெண்டர் மற்றும் அரங்கு அமைப்பது உள்ளிட்ட பலவகையில் நல்ல வசூல் கிடைக்கும். கடந்தாண்டு கொரோனாவால், இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இதனால் கவலையில் இருந்த அதிகாரிகள், வரும் மே மாதத்திற்குப்பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இடமாற்றமும் வந்துவிடும். ஆகவே, பொருட்காட்சி மூலம் வருமானத்தை பார்த்துவிட வேண்டும் என கருதி, இந்த ஆண்டு பொருட்காட்சியை நடத்தியே தீர வேண்டும் என முடிவு செய்து அதற்கான வேலையில் இறங்கினார்களாம். இதுதொடர்பான கோப்பை எடுத்துக்கொண்டு, கலெக்டரிடம் அனுமதி கேட்டிருக்கிறார்கள்.‘‘ஊரே கொரோனாவால் திண்டாடிக் கொண்டிருக்கிறது. கூட்டம் கூடக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. நீங்கள் பொருட்காட்சி நடத்தி, அதில் கூட்டத்தை கூட்டி கொரோனாவை அதிகளவில் பரப்ப முடிவு செய்தீர்களா, எப்படி பொருட்காட்சி நடத்த அனுமதி வழங்க முடியும்?’’ என சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கலெக்டர் ஒருபிடி பிடித்து விட்டாராம். ஆட்சி முடிவதற்குள் கடைசியாக ஒருமுறை வசூல் பார்த்து விடும் வாய்ப்பு போச்சே… என்று வருத்தத்தில் இருக்கிறார்களாம் சில முக்கிய அதிகாரிகள்’’ என்றார் விக்கியானந்தா….

The post ஓசி பிரியாணி கொடுக்காத கடைக்கு ரூ.5000 அபராதம் போட்ட கதையை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Osi Priyani ,wiki ,Peter ,Osi Biryani ,
× RELATED ஆடு திருடிய வாலிபர் கைது