×

ஓசூர் அருகே 60 யானைகள் முகாம்: யானை மிதித்து பெண் பலி: மக்கள் பீதி

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்கு நேற்று முன்தினம் தேன்கனிக் கோட்டை வனப்பகுதியில் இருந்து 60க்கும் மேற்பட்ட யானைகள் வந்துள்ளன. இந்த யானைகள் சினிகிரிப்பள்ளி, புளியந்தோப்பு போடூர் பள்ளத்திற்கு சென்றுள்ளன. அங்கிருந்து வனப்பகுதி ஒட்டியுள்ள பீர்ஜேப்பள்ளி, சானமாவு கோபசந்திரம், ராமாபுரம், ஆழியாளம் உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள ராகி, சோளம், அவரை, துவரை போன்ற பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் யானைகள் அக்டோபர் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் முடிய ஓசூர் வனப் பகுதியில் முகாமிடுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் அக்டோபர் மாதம் முதல் அவ்வப்போது யானைகள் கூட்டம் வருவதும் அந்த யானைகளை மீண்டும் தேன்கனிக் கோட்டை, கர்நாடக வனப் பகுதிக்கு வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் விரட்டுவதும் வழக்கமாக உள்ளது. நேற்று முன்தினம் வந்த இந்த யானைகள் போடூர்பள்ளத்தில் முகாமிட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால் உடனடியாக விரைந்து விரட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை யானை மிதித்து பெண் ஒருவர் பலியானார். ஓசூர் அடுத்த குடிசாதனப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடலட்சுமி அம்மாள் (50). இவரும் இவருடைய 20 வயதுடைய பேத்தியும் இன்று அதிகாலை வீட்டின் அருகேயுள்ள புதர் பகுதிக்கு காலைக்கடனுக்காக சென்றனர். இப்பகுதியில், சானமாவு பகுதியில் முகாமிட்டுள்ள 60க்கும் மேற்பட்ட யானைகளில் இருந்து பிரிந்து வந்த 9 யானைகள் சுற்றி வந்தன. அதில், 8 யானைகள் சென்று விட்டது. ஒரு யானை மட்டும் அங்கேயே சுற்றிவந்தது. வெங்கடலட்சுமி அம்மாள் மற்றும் அவருடைய பேத்தி இருந்த இடத்திற்கு வந்த யானையை பார்த்து இருவரும் பீதியடைந்தனர். யானையின் பிடியில் சிக்காமல் இளம்பெண் தப்பி னார். ஆனால் வெங்கடலட்சுமி அம்மாள் தப்பிக்க முயன்றபோது யானையின் பிடியில் சிக்கினார். அப்போது யானை அவரை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அங்கிருந்து யானை சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த டவுன் போலீசார் வெங்கடலட்சுமி அம்மாளின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

Tags : elephants camp ,Elephant ,Hosur , Elephant
× RELATED கோவிலின் சுற்றுச்சுவரை உடைத்து பாகுபலி யானை அட்டகாசம்