×

வாகன சோதனை, ஆக்கிரமிப்புகள் அகற்றத்தால் புதுவையில் கடந்தாண்டு விபத்து, உயிரிழப்பு கணிசமாக குறைந்துள்ளது

புதுச்சேரி: புதுவையில் அரசு நிர்வாகம் மற்றும் போக்குவரத்து காவல்துறை மேற்கொண்ட ஆக்கிரமிப்பு அகற்றம், தொடர் வாகன சோதனை உள்ளிட்டவை காரணமாக கடந்தாண்டு விபத்துகளின் எண்ணிக்கை மட்டுமின்றி உயிரிழிப்புகளும் கணிசமாக குறைந்துள்ளன.  புதுவையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் அதிகரித்தன. குறிப்பாக இருசக்கர வாகனங்கள், கார்கள் சாலைகளை ஆக்கிரமித்ததால் அடிக்கடி விபத்துகள் நடந்து உயிரிழப்பு தொடர்கதையானது. சாலைகள் விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்ததும் விபத்துகளுக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது.

இந்த நிலையில் புதுவையில் கடந்தாண்டு (2019) அரசு நிர்வாகம், போக்குவரத்து துறை, போக்குவரத்து காவல்துறை ஆகியவை அடுத்தடுத்து மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக நகர பகுதியில் சாலை விபத்துகள் கணிசமாக குறைந்துள்ளன. சாலையோர ஆக்கிரமிப்புகள் தொடர் அகற்றம், நடைபாதைகள் சீரமைப்பு, போக்குவரத்து போலீசாரின் தொடர் வாகன சோதனை, அபராத நடவடிக்கை போன்றவற்றால் முறையான ஆவணங்கள் இன்றி ஓடிய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிக்னல்கள் சீரமைக்கப்பட்டு ஆங்காங்கே போக்குவரத்தை சீரமைக்க தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டன.

மேலும் லைசென்சு இல்லாமல் வாகனம் ஓட்டியவருக்கு அபராதம் வசூலிக்கப்பட்டன. மத்திய சாலை போக்குவரத்து துறையின் அதிகாரிகள் புதுச்சேரியில் ஓரிரு மாதங்கள் முகாமிட்டு வீடியோ பொருத்திய வாகனத்தை பயன்படுத்தி சாலை விதிமீறல்களில் ஈடுபட்டவர்களை ஆதாரங்களுடன் கண்டறிந்து நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுத்தனர். இதுபோன்ற பல்வேறு புதிய நடவடிக்கை காரணமாக புதுச்சேரி நகர பகுதியில் வாகன உயிரிழப்புகள் இந்தாண்டு கடந்தாண்டை ஒப்பிடும்போது 50 சதவீதம் குறைந்தது. 2018ல் மொத்தம் புதுச்சேரியில் மட்டும் 1,350 விபத்துகள் பதிவாகி இருந்தன. கடந்தாண்டு அவை 1,164 ஆக குறைந்தது. அதேவேளையில் 189 உயிரிழப்புகள் 2018ல் நடைபெற்ற நிலையில் 2019ல் 137 ஆக குறைந்தது. இதேபோல் விபத்தில் கை, கால் முறிவு ஏற்பட்டதாக 2018ல் 479 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கடந்தாண்டு இவை 305 ஆக குறைந்தது.

அதிலும் ஒயிட் டவுன் என அழைக்கப்படும் போக்குவரத்து நெரிசல் அதிகமிக்க கிழக்கு போக்குவரத்து காவல் சரகத்தில் 2019ம் ஆண்டு விபத்தில் உயிரிழப்பு என 14 மட்டுமே பதிவானது. அதில் 8 பேர் இருசக்கர வாகன விபத்தில் இறந்துள்ளனர். ஆனால் 2018ல் 29 பேர் வாகன விபத்துகளில் உயிரை பறிகொடுத்துள்ளனர். இதேபோல் வடக்கு காவல் சரகத்திலும் 40 ஆக இருந்த உயிரிழப்பு கடந்தாண்டு 32 ஆக குறைந்தன. மேலும் வில்லியனூர் போக்குவரத்து காவல் துறையில் 2018ல் 71 உயிரிழிப்புகள் வாகன விபத்தில் நடந்தேறிய நிலையில் கடந்தாண்டு 45 ஆக குறைந்தன. தெற்கு போக்குவரத்து காவல் பிரிவில் 49 ஆக இருந்த உயிரிழிப்பு 2019ல் 46 ஆக குறைந்துள்ளது. இதேபோல் வாகன விபத்துகளில் அதிகளவில் உடல் பாதித்த வழக்குகளும் ஒவ்வொரு காவல் சரகத்திலும் குறைந்துள்ளது. புதுவையில் போக்குவரத்து காவலர்களின் துரிதமான பணிகளால் கடந்தாண்டு விபத்துகள் மட்டுமின்றி உயிரிழிப்புகளும் கணிசமாக குறைந்த நிலையில் இந்தாண்டு அதை மேலும் குறைப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Vehicle testing ,removal ,fatalities ,accidents ,Vehicle inspection , Vehicle inspection, occupation,significantly , reduced accidents, fatalities,recent years
× RELATED பாரிமுனையில் விபத்து – இருவர் உயிரிழப்பு