×

விரல்களை ‘கண்களாக’ மாற்றிய வித்தகர்

ஒரு காலத்தில் பார்வையற்ற மனிதருக்கு கல்வி என்பது எட்டாக்கனியாக இருந்தது. அந்த முறையை மாற்றி விரல்களை கண்களாக மாற்றி, அவர்களின் வாழ்க்கை  முறையை மாற்றியவர் லூயி பிரெய்லி. அவர் பிறந்த தினமான ஜன.4ம் தேதியைத்தான், ‘சர்வதேச பிரெய்லி தினம்’ என கொண்டாடுகிறோம். பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் 1809, ஜன.4ம் தேதி பிறந்தவர் லூயிஸ் பிரெய்லி.  இவரது தந்தை குதிரை லாடம், சேணம் தயாரிக்கும் பட்டறை வைத்திருந்தார். குழந்தையாக இருந்தபோது, ஒரு நாள் தந்தையின் பணிமனையில் ஊசியை வைத்து விளையாடினார் லூயிஸ். அப்போது ஊசி கண்ணில் குத்தி காயம் ஏற்பட்டது. காயத்திற்கு முறையான சிகிச்சை பெறாததால் அந்தக் கண்ணில் பார்வை பறிபோனது. பின்னர் ஏற்பட்ட கண் நோயால் அவருடைய இன்னொரு கண்ணிலும் பார்வையை இழந்தார். 8 வயது முழுமை அடைவதற்குள் இரண்டு கண்களிலும் முழுவதும் பார்வை பறிபோனது.
பார்வை பறிபோனதும் வாழ்க்கையே முடிந்து விட்டது என அவர் நினைக்கவில்லை. பிரான்சின் பிரபல பாதிரியாரான வேலண்டெய்ன் இவருக்கு ‘பார்வையாக’ விளங்கினார். அவருடைய உதவியால் தனது 10வது வயதில் ‘ராயல் இன்ஸ்டிடியூட் பார் பிளைண்ட் யூத்’ என்ற பார்வையற்றோருக்கான கல்வி நிறுவனத்தில் லூயிஸ் சேர்ந்தார்.

அப்போது பார்வை இல்லாதவர்களுக்கான உலகின் ஒரே பள்ளி இதுதான். அங்கு எழுத்துகளை விரலால் தொட்டு உணர்வதற்கு ஏற்ப அவற்றை மேடாக்கிப் புத்தகங்கள் தயாரித்து மாணவர்களுக்கு கல்வி புகட்டப்பட்டு வந்தது. மொழிகள், இலக்கணம், இசை, கணிதம், கைத்தொழில் பயிற்சி அனைத்தும் இந்த முறையிலேயே கற்பிக்கப்பட்டன. பள்ளி நூலகத்தில் இருந்த நூல்கள் அனைத்தையும் ஒரே மூச்சில் படித்துவிட வேண்டும் என்கிற ஆசை பிரெய்லிக்கு இருந்தது. ஆனால், புத்தக வடிவில்தான் அவருக்கு பிரச்னை காத்திருந்தது. அதாவது புத்தகத்தின் மீது அனைத்து எழுத்துகளும் தடவிப் பார்த்து உணரும் விதத்தில் மேடாக உருவாக்கப்பட்டிருக்கும். எப்படி எல்லா நூல்களையும் படித்து முடிப்பது என்று அவருக்கு அப்போது புரியவில்லை. எனவே, எளிதாகவும், வேகமாகவும் பயில ஒரு புதிய எழுத்து முறையை உருவாக்க உறுதியேற்றார் லூயிஸ்.

இரவும் பகலும் பாடுபட்டு ஆராய்ச்சியில் இறங்கினார். புள்ளிகளைப் பல விதமாக மாற்றி மாற்றி அமைத்து, பரிசோதனைகள் செய்து, ஒரு புதிய குறியீட்டு மொழியை அவர் உருவாக்கினார். இந்தப் புதிய எழுத்து முறையை உருவாக்கியபோது அவருக்கு 20 வயதுகூட பூர்த்தியாகவில்லை. அவரது இந்தக் கண்டுபிடிப்பை பாராட்டி, ஊக்கப்படுத்திய பள்ளியின் இயக்குநர், பள்ளியிலும் அதை அறிமுகம் செய்தார். பட்டப்படிப்பு முடித்த பிறகு அதே பள்ளியில் லூயிஸ் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். 6 புள்ளிகள் கொண்ட பிரெய்லி முறையின் முதல் புத்தகத்தை 1829ல் அவர் வெளியிட்டார். இதே முறையைப் பயன்படுத்தி ‘ஹிஸ்டரி ஆஃப் பிரான்ஸ்’ என்ற நூலை அவரது பள்ளி நிர்வாகம் 1837ல் வெளியிட்டது. தொடர்ந்து அறிவியல், கணிதம் தொடர்பான பிரெய்லி எழுத்து முறை புத்தகங்களை அவர் வெளியிட்டார்.

தனது முயற்சிகளுக்கு சமுதாய மற்றும் சட்டப்பூர்வமான அங்கீகாரம் பெற தொடர்ந்து போராடியும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. பார்வையற்றோர் வாழ்வில் நம்பிக்கை ஒளி ஏற்றிவைத்த மேதை லூயிஸ் பிரெய்லி காசநோயால் பாதிக்கப்பட்டு, 1852, ஜன.6ம் தேதி தனது 43வது வயதில் உயிர் நீத்தார். மரணத்திற்குப் பிறகு இவர் கண்டுபிடித்த ஆறு புள்ளிகளை ஆதாரமாகக் கொண்ட எழுத்து முறை படிப்படியாகத் தொடர்ந்து பிரபலமடைந்தது. பார்வையற்றவர் கண்கள் இல்லையென கவலைப்பட வேண்டாம். அவர்களின் விரல்களையே கண்களாக மாற்றிய லூயி பிரெய்லி பார்வையற்றவர்களின் இதயங்களில் என்றும் வாழ்வார்.

Tags : fingers, turned , eyes
× RELATED சிங்கப்பூர் புதிய பிரதமராக லாரன்ஸ் வோங் பதவியேற்பு