×

ரூ.2.30 கோடி பாக்கியால் டீசல் நிரப்ப முடியவில்லை: அமைச்சர் காரை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வாகனங்களும் தவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி அமுதசுரபி பெட்ரோல் பங்கிற்கு அரசு துறைகள் ரூ.2.30 கோடி பாக்கி வைத்திருந்த நிலையில் நேற்றிரவு அமைச்சரின் வாகனத்தை தொடர்ந்து டீசல் நிரப்ப முடியாமல் சுகாதாரத்துறை ஆம்புலன்ஸ் வாகனங்கள் இன்று பரிதவிப்புக்கு ஆளாகின. இத்தகவலை அறிந்த சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நோயாளிகளின் நலன்கருதி தனது சொந்த பணம் ரூ.2 லட்சத்தை வழங்கி பெட்ரோல் நிரப்ப நடவடிக்கை எடுத்தார். புதுச்சேரியில் அரசு கூட்டுறவு நிறுவனமான அமுதசுரபிக்கு சொந்தமான பெட்ரோல் பங்க்குகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு அமைச்சர்கள், அதிகாரிகளின் வாகனங்களுக்கு எரிபொருட்கள் நிரப்பப்படுகிறது. அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட அரசு துறைகள் வழங்குவது வாடிக்கையாக உள்ளது. தற்போது நிதி நெருக்கடி காரணமாக பெரும்பாலான கான்பெட் பெட்ரோல் பங்குகளும் தற்போது மூடப்பட்டு விட்டன. அதிக வருவாய் ஈட்டிய திலாஸ்பேட் பங்கு ஒரு மாதத்திற்கு மேலாக மூடிக் கிடப்பதால் வாகன ஓட்டிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.

இதனிடையே லாஸ்பேட்டை, இசிஆர் அமுதசுரபி பெட்ரோல் பங்கில் மட்டும் அரசு துறைகள் ரூ.2.30 கோடி வரை பாக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல் பங்கை தொடர்ந்து நடத்துவதில் அந்நிறுவனத்துக்கு சிரமம் ஏற்பட்டு வந்த நிலையில், டிசம்பர் 31ம் தேதிக்கு பிறகு அரசு துறை வாகனங்களுக்கு கடனில் பெட்ரோல், டீசல் நிரப்ப வேண்டாமென ஊழியர்களுக்கு அமுதசுரபி நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இதுகுறித்த தகவலை அறிவிப்பு பலகையில் ஒட்டியதோடு சம்பந்தப்பட்ட அரசு துறைகளுக்கு இதுகுறித்த கடிதத்தையும் அமுதசுரபி நிர்வாகம் அனுப்பியது. அதில் இதுபோன்ற பிரச்னைகளை களைய எரிபொருள் நிரப்ப ஸ்வைப் வசதிக்கு மாற வேண்டுமென மீண்டும் வலியுறுத்தி இருந்தது.

நேற்றிரவு புதுச்சேரி வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணனின் அரசு வாகனத்தை இந்த பெட்ரோல் பங்கிற்கு எரிபொருள் நிரப்ப அவரது டிரைவர் ஓட்டிவந்தார். அப்போது அங்கு பணியிலிருந்த ஊழியர்கள் நிலுவை பாக்கியை சுட்டிக் காட்டி அமைச்சரின் வாகனத்துக்கு டீசல் நிரப்ப மறுத்து விட்டனர். இதனால் அமைச்சரின் கார் டிரைவருக்கும், ஊழியர்களுக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அமைச்சரின் வாகனத்தை கார் டிரைவர், எரி பொருள் நிரப்பாமலே அங்கிருந்து எடுத்துச் சென்று விட்டார்.

இதுபற்றி அமுதசுரபி வட்டாரத்தில் விசாரித்தபோது, கடந்த 4 மாதத்தில் மட்டும் அரசு துறை வாகனங்களுக்கு ரூ.2.30 கோடிக்கு எரிபொருள் நிரப்பி பணம் வசூல் செய்யப்படாமல் உள்ள நிலையில் பெட்ரோல் பங்கை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டு இருப்பதாகவும், இதன் காரணமாகவே அமைச்சரின் வாகனத்துக்கு டீசல் நிரப்ப முடியாத நிலை உருவானதாகவும் தெரிவித்தனர். இதனிடையே அமைச்சரின் வாகனத்துக்கு எரிபொருள் நிரப்பாமல் திருப்பி அனுப்பிய விவகாரம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காண நாராயணசாமி நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை சுகாதாரத்துறையின் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு டீசல் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏழை நோயாளிகளை அவசர சிகிச்சைக்கு மாற்று இடங்களுக்கு அழைத்துச் செல்வதில் சிரமம் நிலவின. இதையடுத்து துணை இயக்குனர் ரகுநாதன் (பொது சுகாதாரம்) இத்தகவலை துறை அமைச்சரான மல்லாடி கிருஷ்ணாராவ் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

நோயாளிகளுக்கான அத்தியாவசிய தேவையான ஆம்புலன்ஸ் டீசல் இல்லாமல் இயக்கப்படாத செய்தியை அறிந்த அமைச்சர், மாற்று வழிகளுக்கான ஆலோசனைகளை அதிகாரிகளுடன் மேற்கொண்டார். அப்போது தன்னிடம் உள்ள மற்ற துறையின் நிதியை அவசரத்துக்காக மாற்றம் செய்யலாமா? இடைக்கால நிதி ஒதுக்கவும், மறுமதிப்பீடு செய்யவும் வழிமுறைகள் உள்ளதா? என்பதை ஆராய்ந்த அமைச்சர், இதற்கு கூடுதலாக காலஅவகாசம் தேவைப்படும் என்பது தெரியவரவே, உடனடியாக தனது சொந்த பணம் ரூ.2 லட்சத்தை அமுதசுரபி பெட்ரோல் பங்க் நிர்வாகத்துக்கு காசோலையாக வழங்கி ஆம்புலன்ஸ்களுக்கு எரிபொருள் நிரப்ப நடவடிக்கை எடுத்தார். அரசின் நிதி முழுமையாக அமுதசுரபிக்கு கிடைத்தவுடன், தனது பணத்தை திருப்பி தருமாறு கேட்டுக் கொண்டதை நிர்வாகம் ஏற்றுக் கொண்டதால் அதன்பிறகு ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு டீசல் நிரப்பி நோயாளிகளை அழைத்துச் சென்றன. இதற்கிடையே இன்று மாலை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்திலும் இப்பிரச்னை விவாதிக்கப்பட்டு அதிரடி நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதால் புதுச்சேரி அரசு வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

Tags : minister ,Puducherry , Puducherry
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...