×

மயிலாடுதுறை மாவட்டமானதால் திருமருகல் தனி தாலுகாவாக அறிவிக்கப்படுமா?.. மக்கள் நாகைக்கு அலையும் அவலம்

நாகை: நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டது போல் திருமருகல் பகுதியை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். திரு என்றால் அடைமொழி, மருகல் என்றால் வாழை என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் திருமருகல் ஒரு காலத்தில் வாழைதோப்புகள் நிறைந்த பகுதியாக காட்சியளித்தது. இவ்வாறு வாழைத்தோப்புகள் நிறைந்த திருமருகல் தஞ்சை ஜில்லாவில் இருந்தது. நாகை மாவட்டம் பிரிக்கப்பட்டபோது திருமருகல் ஒன்றியமாக மாற்றப்பட்டு நன்னிலம் தாலுகாவுடன் இணைக்கப்பட்டது. இதன் பின்னர் நாகை தாலுகாவுடன் இணைக்கப்பட்டது. திருமருகல் ஒன்றியத்தில் வசிக்கும் மக்கள் தங்களது தேவைகளை நிவர்த்தி செய்ய 35 கிலோ மீட்டர் கடந்து நாகை தாலுகா அலுவலகத்திற்கு வரவேண்டிய நிலை உள்ளது. திருமருகலை தலைமையிடமாக கொண்டு தனி தாலுகா அமைக்க வேண்டும் என்று கடந்த 30 ஆண்டுக்குமேலாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அரசு கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறையை பிரித்து புதிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த நேரத்தில் திருமருகல் ஒன்றியம் தாலுகா அந்தஸ்து பெற்றுவிடும் 35 கிலோ மீட்டர் தூரம் கடந்து தாலுகா அலுவலகம் செல்ல வேண்டிய சிரமம் இனிமேல் இருக்காது என்று திருமருகல், திட்டச்சேரி ஆகிய பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அனைவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. திருமருகல் தாலுகா அந்தஸ்து பெற அனைத்து தகுதிகளும் இருப்பதாக அப்பகுதி பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். சரவணன்: நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் 209 குக்கிராமங்கள், 29 ஊராட்சிகள், 1 பேரூராட்சிகள் உள்ளது. இங்கு 1 லட்சத்து 4 ஆயிரம் மக்கள் வசிப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது. 291 ஊராட்சி வார்டுகள், 39 கிராம ஊராட்சி, 16 ஒன்றிய வார்டு, 2 மாவட்ட ஊராட்சி வார்டுகள் அடங்கியுள்ளது. 68 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். 1985 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டது. 151 கிலோ மீட்டர் ஒன்றிய சாலைகள் கொண்டது. திருமருகல், கங்களாஞ்சேரி, திருகண்ணபுரம் என்று 3 வருவாய் சரகம் உள்ளது. இதில் திருமருகல் சரகத்தில் 18 வருவாய் கிராமங்களும், கங்களாஞ்சேரி சரகத்தில் 17 வருவாய் கிராமங்களும், திருக்கண்ணபுரம் சரகத்தில் 19 வருவாய் கிராமங்களும் என மொத்தம் 54 வருவாய் கிராமங்கள் அமைந்துள்ளன. 136 கிராமங்கள் திட்டச்சேரி காவல் சரகத்திற்குட்பட்டும், 73- கிராமங்கள் நாகூர் காவல் சரகத்திற்கு உட்பட்டும் அமைந்துள்ளது. ஆறுகள் மூலம் பாசனம் பெற்று சுமார் 13-ஆயிரம் எக்டேர் பரப்பளவில் குறுவை, சம்பா, தாளடி என மூன்று போகம் நெல் சாகுபடியும், பருத்தி, உளுந்து பயறு, கரும்பு, சோளம், வாழை ஆகிய பணப்பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது. ‘திருமருகல் ஒன்றியத்தில் 5- அரசு மேல்நிலைப் பள்ளிகளும், 7- அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 12- ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளும், 4- அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளும், 56- ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளும், 1- அரசு தொடக்கப் பள்ளியும். 5- அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளும். 4- ஆதிதிராவிடர் நலத் தொடக்கப் பள்ளிகளும், 13- மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளும், 2- மெட்ரிக்குலேசன் பள்ளிகளும். 1- இயலாக் குழந்தைகள் மையமும், தனியார் தொழிற்பயிற்சி கல்லூரி உள்ளது. இவ்வாறு பொதுமக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருக்கும்போது திருமருகல் பகுதியை தலைமையிடமாக கொண்டு ஏன் தனி தாலுகா அறிவிக்க கூடாது. கடந்த 30 ஆண்டு காலத்திற்கும் மேலாக போராடும் மக்களின் கனவை நனவாக்க வேண்டும் என்றார்.காளியம்மாள்: நாகை மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கும் போது திருமருகல் தனி தாலுகாவாக அறிவிக்கப்படும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தோம். ஆனால் மாவட்டம் அறிவிப்பு மட்டுமே வந்தது. திருமருகல் தாலுகாவாக மாற்றப்படும் என்ற அறிவிப்பு எங்கள் பகுதி மக்களுக்கு பகல் கனவாக போனது. திருமருகல் பகுதியை தலைமையிடமாக கொண்டு தாலுகா அறிவிக்கப்படும் அதற்கு இடம் தேவை என்று திருமருகல் சந்தைபேட்டை பகுதி மற்றும் ஆதலையூர் பகுதியில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. ஆய்வு நடத்தப்பட்டு பல மாதங்கள் ஆகி கிடப்பில் போடப்பட்டுள்ளது. திருமருகல் பகுதியில் இருந்த சார்பதிவாளர் அலுவலகம் திருவாரூர் மாவட்டம் பேரளம் பகுதிக்கு சென்றுவிட்டது. இதனால் திருமருகல் பகுதியில் பதிவு தொடர்பாக பொதுமக்கள் நாகூர், பேரளம் ஆகிய இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதே போல் தீயணைப்பு நிலையத்திற்கு போதுமான இடம் இல்லாமல் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வளாகத்தில் செயல்பட வேண்டிய அவலம் உள்ளது. இதற்கு எல்லாம் நிரந்தர தீர்வு ஏற்பட திருமருகல் பகுதியை தாலுகாவாக அறிவிக்க வேண்டும் என்றார்.செங்குட்டுவன்:  திருமருகல் ஒன்றியத்தில் கோச்செங்கட்சோழன் காலத்தில் யானை ஏறா மாடக்கோயிலாக அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புடைய திருமருகல் ரத்தினகிரிஸ்வரர் ஆலயம், திருநீலநக்கநாயனார் சிறப்பு பெற்ற திருசாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் ஆலயம், சிறுத்தொண்டநாயனார் சிறப்பு பெற்ற திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோயில், வைணவ பெருமக்களால் கீழை வீடாகப் போற்றப்பட்டு 5-ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்ய தேசங்களில் 17-வதாகப் போற்றப்படும் திருக்கண்ணபுரம் சௌரிராஜப் பெருமாள் ஆலயம் என பல்வேறு திருக்கோயில்கள் அமைந்துள்ளன. தம்பி வா தலைமையேற்க வா என பேரறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட ஐம்பெரும் தலைவர்களில் ஒருவரான நாவலர் நெடுஞ்செழியன் பிறந்த ஊர் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள திருக்கண்ணபுரம் ஆகும். பத்திரிக்கை மற்றும் திரைப்படத்துறையில் சிறந்து விளங்கிய எஸ்.எஸ்.வாசன் பிறந்த ஊர் நரிமணம் ஆகும். திருமருகல் ஒன்றியத்தில் வருவாய் தரக்கூடிய இயற்கை எண்ணை எரிவாயு நிறுவனம், எண்ணை சுத்திகரிப்பு ஆலை நிறுவனம், இந்தியன் ஆயில் நிறுவனம், சோப்பு தயாரிப்பு தொழிற்சாலை, மின் உற்பத்தி செய்யும் 2- துணைமின் நிலையங்கள், என தொழில் நிறுவனங்கள் அமைந்துள்ளது. திருமருகலைவிட குறைந்த வருவாய் கிராமங்களைக் கொண்ட கீழ்வேளூர், திருக்குவளை ஆகிய ஊர்கள் தனித் தாலுகா அந்தஸ்து பெற்றுள்ளது. ஆனால் தாலுகா அமைவதற்கான வசதிகள் அனைத்தும் இருந்தும் திருமருகல் மட்டும் தனித் தாலுகாவாக இது வரை ஆக்கப்படவில்லை என்றார்.11 எம்எல்ஏக்கள் உறுதிமொழி அளித்தும் நிறைவேற்றவில்லைஇப்பகுதியில் இதுவரை வெற்றி பெற்று சென்ற 11 எம்எல்ஏக்கள் திருமருகல் தனித் தாலுகாவாக உருவாக்கித் தருவோம் என ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதியளித்து சென்றுள்ளனர். ஆனால் நிறைவேற்றி தரவில்லை. எனவே தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி திருமருகலை தலைமையிடமாகக் கொண்டு தனி தாலுகாவாக அறிவித்து 30ஆண்டுகால கோரிக்கையை வரும் பட்ஜ்ட் கூட்டத் தொடரில் அறிவித்து நிறைவேற்றித் தர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.209 குக்கிராமங்கள்அம்பல் ஊராட்சியில் 10 குக்கிராமங்களும், அகரக்கொந்தகை ஊராட்சியில் 3, ஆதலையூர் ஊராட்சியில் 2, ஆலத்தூர் ஊரட்சியில் 3, இடையாத்தங்குடி ஊராட்சியில் 4, எரவாஞ்சேரி ஊரட்சியில் 7, ஏனங்குடி ஊராட்சியில் 7, ஏர்வாடி ஊராட்சியில் 9, கங்களாஞ்சேரி ஊராட்சியில் 5, கட்டுமாவடி ஊரட்சியில் 5, காரையூர் ஊராட்சியில் 7, குத்தாலம் ஊரட்சியில் 5, கீழத்தஞ்சாவூர் ஊராட்சியில் 1- குக்கிராமமும், கீழப்பூதனூர் ஊராட்சியில் 9, கொங்கராயநல்லூர் ஊராட்சியில் 4-, கொத்தமங்கலம் ஊராட்சியில் 7, கொட்டாரக்குடி ஊராட்சியில் 7, கோட்டூர் ஊராட்சியில் 6, கோபுராஜபுரம் ஊராட்சியில் 3, மருங்கூர் ஊராட்சியில் 1, நரிமணம் ஊராட்சியில் 3, நெய்க்குப்பை ஊராட்சியில் 3 பனங்குடி ஊராட்சியில் 12, பண்டாரவாடை ஊராட்சியில் 3, பில்லாலி ஊராட்சியில் 4, போலகம் ஊராட்சியில் 12, புத்தகரம் ஊராட்சியில் 8, ராராந்திமங்கலம் ஊராட்சியில் 3, சீயாத்தமங்கை ஊராட்சியில் 6, சேஷமூலை ஊராட்சியில் 6, திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் 2, திருக்கண்ணபுரம் ஊராட்சியில் 6, திருமருகல் ஊராட்சியில் 6, திருப்பயத்தங்குடி ஊராட்சியில் 5, திருப்புகலூர் ஊராட்சியில் 8, உத்தமசோழபுரம் ஊராட்சியில் 4, வடகரை ஊராட்சியில் 3, வாழ்குடி ஊராட்சியில் 5, விற்குடி ஊராட்சியில் 5 என மொத்தம் ஒன்றியத்தில் 209 குக்கிராமங்கள் உள்ளன….

The post மயிலாடுதுறை மாவட்டமானதால் திருமருகல் தனி தாலுகாவாக அறிவிக்கப்படுமா?.. மக்கள் நாகைக்கு அலையும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai district ,Nagai ,Mayiladuthara District ,Nagai District ,
× RELATED மயிலாடுதுறை மாவட்டத்தில் 90 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி