×

இலவச வேட்டி, சேலைக்கு நூல் வாங்கியதில் முறைகேடு லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: இலவச வேட்டி,  சேலை திட்டத்தில் ₹21 கோடியே 31 லட்சம் முறைகேடு தொடர்பாக கொடுக்கப்பட்ட புகார் மீது சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஏழை எளிய மக்களுக்கு ஒரு கோடியே 25 லட்சம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி செய்வதற்கான நூல்களை,  தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித்துறை கொள்முதல் செய்து, நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கியுள்ளது. நெசவாளர்களுக்கு ஒரு சேலையை நெய்வதற்கு ₹260 கூலியாக வழங்கப்படுகிறது.  இந்நிலையில், தரம் குறைந்த நூல்களை அதிக விலைக்கு கொள்முதல் செய்ததன் மூலம், அரசுக்கு ரூ.21 கோடியே 31 லட்சத்து 21 ஆயிரத்து 250 இழப்பு ஏற்படுத்தி உள்ளதாகக் கூறி, திருப்பூரை சேர்ந்த முத்தூர் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் கோவிந்தராஜ் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ஒரு நாளைக்கு 6 சேலைகள் நெய்யப்படும் நிலையில், தரம் குறைந்த நூல்களை நெய்வதற்கு வழங்கியதால் ஒரு நாளைக்கு 3 சேலைகளை மட்டுமே நெய்ய முடியும். இதனால் எங்கள் தொழிலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. தரம் குறைந்த நூல்களை, அதிக விலைக்கு கொள்முதல் செய்ததன் மூலம், அரசுக்கு ₹21.31 கோடி இழப்பு ஏற்படுத்தியது. இது தொடர்பாக, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைத்தறி மற்றும் ஜவுளி துறை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி லஞ்ச ஒழிப்பு துறை இயக்குனருக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மனுவை பரிசீலித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

 இந்த மனு நேற்று நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் நீலகண்டன் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கொடுத்த மனு மீது லஞ்ச ஒழிப்புத்துறை மூன்று மாதத்திற்குள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.


Tags : High Court ,purchase , Free Veti, Salem, High Court
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...