×

மின்சாரம் பாய்ந்து 2 ஊழியர்கள் பலி ஸ்டான்லி மருத்துவமனையை உறவினர்கள் திடீர் முற்றுகை: இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

தண்டையார்பேட்டை: மின்மாற்றியில் ஏற்பட்ட பழுதை சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்து இறந்த 2 ஊழியர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் ஸ்டான்லி மருத்துவமனையை முற்றுகையிட்டனர். சென்னை கொத்தவால்சாவடி ஆவுடையப்ப நாயக்கன் தெருவில் நேற்று முன்தினம் காலை பெய்த மழையால், அங்குள்ள மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு, அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இதனை சரி செய்ய கோரி சவுகார்பேட்டை ஏழுகிணறு பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு புகார்கள் வந்தன. அதன்பேரில், மின்வாரிய ஊழியர்கள் வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த வின்சென்ட் (40), எண்ணூரை சேர்ந்த உதயா (45) ஆகியோர், ஆவுடையப்பன் தெரு கோவிந்தப்பன் தெரு சந்திப்பில் உள்ள மின்மாற்றி மீது ஏறி பழுதை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, எதிர்பாராதவிதமாக இவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் வின்சென்ட் மின்மாற்றியில் இருந்து தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். உதயா மின்சாரம் பாய்ந்து டிரான்ஸ்பார்மர் மீதே உடல் கருகி பலியானார். தகவலறிந்து கொத்தவால்சாவடி போலீசார், உயர் நீதிமன்ற தீயணைப்பு வாகனத்துடன் சம்பவ இடத்துக்கு வந்து, 2 சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மின்மாற்றியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தபோது எப்படி மின்சாரம் பாய்ந்தது? என்று கொத்தவால்சாவடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இறந்தவர்களின் மனைவி மற்றும் உறவினர்கள் நேற்று காலை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு வந்து, இறந்த 2 ஊழியர்களின் குடும்பத்துக்கும் இழப்பீடு வழங்க வேண்டும். அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு மின்வாரிய அலுவலகத்தில் வேலை வழங்கப்படும், என அதிகாரிகள் உத்திரவாதம் அளிக்க வேண்டும். இல்லையெனில் சடலங்களை பெற்றுக்கொள்ள மாட்டோம், என வலியுறுத்தி மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
இதையடுத்து மருத்துவமனை போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, ‘‘உங்கள் கோரிக்கை தொடர்பாக உயரதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’, என்றனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.


Tags : Stanley Hospital , Electricity ,Strip 2 Employees, Killed ,Stanley Hospital
× RELATED சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின்...