களிமண் எடுக்க கட்டுப்பாடு பொங்கல் பானை தயாரிப்பு பணி மந்தம்: தொழிலாளர்கள் வேதனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த கோதவாடி குளத்திலிருந்து,ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே களிமண் எடுக்க அனுமதி வழங்கியிருப்பதால், பொங்கலையொட்டி மண் பானை தயாரிக்கும் பணி மந்தமடைந்துள்ளதாக,  தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர். பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் ஆர்.பொன்னாபுரம்,முத்தூர், வடக்கிபாளையம்,தேவிபட்டிணம், சேத்துமடை,அம்பராம்பாளையம், சமத்தூர்,அங்கலகுறிச்சி,சின்னாம்பாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் மண்பாண்ட தொழில் நடக்கிறது. சமையலுக்கு தேவையான பானைகள் மட்டுமின்றி, நவராத்திரி கொழு பொம்மை, கார்த்திகையையொட்டி அகல் விளக்கு என முக்கிய விசேஷங்களின்போது மண்பாண்ட தொழில் பரபரப்பாக இருக்கும்.

 பொங்கல் பண்டிகைக்கு இரண்டு வார காலமே இருப்பதால் மண்பாண்ட தொழிலாளர்கள் பலரும், மண் பானை தயாரிப்பில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே முழுவீச்சில் ஈடுபட்டனர். ஆனால் இந்த முறையும், பானை தயாரிப்பதற்குண்டான உரிய களிமண்ணை கோதவாடி குளத்திலிருந்து எடுக்க முடியவில்லை. இதனால் பானை தயாரிக்கும் பணியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மண்பாட தொழிலாளர்கள் பலர் கூறுகையில், ‘பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மண்பாண்ட தொழிலில் ஈடுபடுகின்றனர். சமையலுக்கு தேவையான பானை, கொழுபொம்மை, அகல்விளக்கு உள்ளிட்டவை தயாரிப்பதற்காக, கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி குளத்திலிருந்து ஒவ்வொரு ஆண்டும் முறையாக அனுமதிபெற்று களிமண் எடுத்து வந்தோம்.

இதற்காக ஆண்டுதோறும் எங்களின் உரிமையை புதுப்பித்து வந்துள்ளோம். ஆனால், கடந்த சில ஆண்டுக்கு முன்பு கோதவாடி குளத்துக்கு களிமண் எடுக்க சென்ற வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டது. அந்நேரத்தில், வருவாய்த்துறை அதிகாரிகள் தலையிட்டு களிமண் எடுக்க ஒத்துழைப்பு அளித்தனர். அதன்பின், கோதவாடி கிராமத்தினர் பலர், அங்குள்ள குளத்திலிருந்து களிமண் எடுத்து செல்ல முறையாக அனுமதிக்காதது வேதனை ஏற்படுத்துகிறது.
கோதவாடி குளத்திலிருந்து ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வாகனத்தில் களிமண்  எடுக்க வேண்டும் என வருவாய்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். அந்த களிமண், ஆண்டு முழுவதும் போதுமானதாக இருப்பதில்லை. மிகவும் குறைவாக எடுக்கப்படும் களிமண்ணால், மண்ணாலான பொருட்கள் குறைவாகவே தயாரிக்க முடிகிறது.

பொங்கல் பண்டிகை நெருங்குவதையொட்டி பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராம பகுதி மட்டுமின்றி பல இடங்களில் இருந்து ஆர்டர்கள் வரபெற்றுள்ளது. ஆனால் இந்த முறை பொங்கல் பண்டிகையையொட்டி பானை தயாரிப்பதற்குண்டான களிமண் போதியளவு கிடைக்கபெறாததால், இப்பணி மந்த கதியில் நடந்து வருகிறது. பிற குளத்தில் உள்ள மண், கோதவாடி குளத்தில் உள்ள களிமண் போன்று இல்லாததால், பானை தயாரிப்புக்குண்டான தரமான களிமண் கிடைக்காமல் அவதிப்படுகின்றோம். எனவே, நாங்கள் மண்பாண்ட தொழிலை முறையாக மேற்கொள்ள கோதவாடி குளத்திலிருந்து ஆண்டிற்கு மூன்று முறையாவது  களிமண் எடுக்க, அதிகாரிகள் உத்தரவு அளிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Clay, pongal pot, preparatory work, mantra
× RELATED ஒரே பைக்கில் சென்ற 3 வாலிபர்களை லத்தியால் தாக்கிய எஸ்ஐ