×

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை,கோவையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயில்: பயணிகள் வலியுறுத்தல்

ராமேஸ்வரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கோவை,திருப்பூர் மாவட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பின்தங்கிய மாவட்டமான ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பஞ்சு நூற்பாலை, பனியன், மோட்டார் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இதுதவிர திருச்செங்கோடு, அந்தியூர் பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஏராளமான மாணவர்கள் படிக்கின்றனர். பொங்கல் விடுமுறைக்கு ஊர் திரும்பும் மாணவர்கள், தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கள் ஊர்களுக்கு நேரடியாக செல்ல ரயில் வசதி இல்லை.

இதனால் மூன்று மாவட்டங்களிலும் உள்ள பஸ் ஸ்டாண்டுகளிலும், டெப்போக்களின் முன்பும் மணிக்கணக்கில் காத்து கிடக்கும் அவலம் ஆண்டுதோறும் தொடர்கிறது. இதனால் பல குடும்பங்கள் தைப்பொங்கல் அன்று மதியத்திற்கு மேல்தான் ஊர்போய் சேருகின்றனர். இதேபோல சென்னையில் வசிப்பவர்கள், படிப்பவர்கள், வேலைபார்ப்பவர்களும் நேரடியாக சிவகங்கை, ராமநாதபுரம் வருவதற்கு சிறப்பு ரயில்களையும் இயக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியை சேர்ந்த பயணிகள் கூறுகையில், மதுரையிலிருந்து கோவை,பொள்ளாச்சி அகலப்பாதை பணிகள் முடிந்து பல ஆண்டுகளாகியும் ராமேஸ்வரத்திற்கு நேரடியாக பயணிகள் ரயில்களை இயக்க சேலம், மதுரை ரயில்வே கோட்ட நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் வேலை வாய்ப்புக்காக சென்ற ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் கடந்த 8 ஆண்டுகளாக போதிய ரயில்வசதி இன்றி அவதிப்படுகின்றனர்.

இதனால் தென்மாவட்ட மக்களுக்கு பண்டிகைகால ரயில் பயணம் கனவாகவே இருக்கிறது. பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் ரயில்வே நிர்வாகம் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு மட்டுமே சிறப்பு ரயில்களை இயக்குகிறது. ஆனால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் வேலை செய்யும் தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்குவதில்லை. நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் போல கோவையில் இருந்து திருப்பூர், ஈரோடு, கருர், திண்டுக்கல், மதுரை வழியாக ராமேஸ்வரம் வரை சிறப்பு ரயிலை இயக்கினால் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு வசதியாக இருக்கும். தென்னக ரயில்வே நிர்வாகம் மூலம் சிறப்பு ரயில்கள் விட ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்றனர். வரும் 15ம் தேதி புதன் கிழமை பொங்கல் என்பதால் 14ம் தேதி இரவு கோவையில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சிறப்பு ரயிலும், மறுமார்க்கமாக 19ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு ராமேஸ்வரத்தில் இருந்து சிறப்பு ரயிலும் விட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Karnataka ,festival ,Pongal ,Rameshwaram ,Chennai , Pongal festival, Chennai, Coimbatore, Rameswaram, special train
× RELATED கர்நாடகாவில் ஸ்மோக்கிங் பிஸ்கட்...