×

இறந்தது தெரியாமல் வள்ளிக்காக காத்திருக்கும் லட்சுமி: புத்துணர்வு முகாமில் நெகிழ்ச்சி

மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டி கிராமத்தில் கோயில் மற்றும் மடங்களைச் சேர்ந்த 26 யானைகளுக்கும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த 2 யானைகள் என மொத்தம் 28 யானைகளுக்கு புத்துணர்வு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
முகாமில் காலை, மாலை நடைபயிற்சியும் பவானி ஆற்றின் கரையோரத்தில் ஷவர் குளியலும், பசும் தீவனம், அரிசி மற்றும் தானியங்கள் கலந்த ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு முழு ஓய்வு அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர முகாமில் தேவைப்படும் யானைகளுக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வருகிறது முகாமில் கலந்து கொண்டுள்ள ஒவ்வொரு யானைக்கும் தோழிகள் உண்டு. நடை பயிற்சியின் போதும், குளிக்கும்போதும் அந்த யானைகள் தங்கள் தோழிகளை அருகில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளும்.

அந்நேரங்களில் துதிக்கையால் ஒருவரை ஒருவர் வருடிக் கொள்ளுவதும் பலத்த சத்தம் எழுப்பி தங்கள் அன்பை பரிமாறிக் கொள்வதும் வழக்கம். கடந்த 10 ஆண்டுகளாக மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமில் தூத்துக்குடி மாவட்டம் இரட்டைத் திருப்பதி கோயில் யானை லட்சுமியும், குற்றாலம் இலஞ்சி குமாரர் கோயில் வள்ளியும் இணைபிரியா தோழிகளாக வலம் வந்தன. இரு யானைகளும் நேருக்கு நேர் பார்த்துக் கொள்ளும்படி எதிரெதிரே  கட்டப்பட்டிருக்கும். இந்நிலையில் கடந்தாண்டு நடந்த முகாமிலும் பங்ேகற்று 48 நாட்கள் இரு யானைகளும் தங்களது அன்பை பரிமாறி பிரிந்து சென்றன. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வள்ளி உடல்நலக்குறைவால் உயிரிழந்தது. இது பற்றி அறியாத லட்சுமி முகாமுக்கு வந்த நாள் முதல் தன் தோழியை தேடிக்கொண்டிருக்கிறது.

இதுவரை தன் தோழி வராத காரணத்தினால் பல சமயங்களில் இரவு நேரத்தில் தன் தோழியை காணவில்லை என்ற நிலையில் சத்தம் எழுப்பும் அப்போது பாகன் எழுந்து வந்து, வள்ளி வருவாள் கவலைப்படாதே அவள் லாரியில் வந்து கொண்டிருக்கிறாள் என்று ஆறுதல் கூறி தேற்றுவதோடு, பேரிச்சம் பழத்தை கொடுத்து, மீண்டும் லட்சுமியை ஆசுவாசப்படுத்தி தூங்க வைக்கிறார். பகல் நேரங்களில் தன் யானைக்கு எதிரே வள்ளி கட்டப்பட்டு இருந்த இடத்தில் பசுந்தீவனத்தை போட்டு வைத்திருக்கிறார். மேலும் தனக்கு உணவு வழங்கும் போதெல்லாம் வள்ளியை தேடும் லட்சுமி உற்சாகம் இழந்து காணப்படுகிறது. பத்தாண்டு கால தோழியான வள்ளி முாகமில் இல்லாத குறையை போக்க, முகாம் ஏற்பாட்டாளர்களின் அறிவுறுத்தலின் பேரில், முகாமில் இருக்கும் மற்ற யானைகளுடன் லட்சுமியை புதிய தோழியை கண்டுபிடிக்க முடிவு செய்து பழகவிட்டனர்.

ஆனால் லட்சுமியோ வள்ளியைத் தவிர யாரையும் தன் தோழியாக ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை என்பது கண்கூடாக தெரிய வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக புத்துணர்வு முகாமில் இணைபிரியாத ஜோடிகளாக  வலம்வந்த தன் தோழி வள்ளி இனி எப்போதும் தன்னருகே வரமாட்டாள் என்றாலும்கூட வள்ளியின் வருகைக்காக காத்திருக்கிறாள் இரட்டைத் திருப்பதி கோயில் யானை லட்சுமி.

Tags : Lakshmi ,death ,Valli , Valli, Lakshmi, refreshment
× RELATED திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா...