எட்டயபுரம் அருகே சிறுவன் கொலை எதிரொலி வீடுகள் சூறையாடல் வாகனங்களுக்கு தீவைப்பு

எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே ஓரினச் சேர்க்கைக்காக 6 வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து கொலையாளியின் உறவினர் வீடுகள் சூறையாடப்பட்டதுடன், பைக், சைக்கிளுக்கு தீ வைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே வடக்கு  முத்துலாபுரம் வயல் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஜெய்சங்கர் மகன் நகுலன் (6). அங்குள்ள பள்ளியில் 1ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த டிச.30ம் தேதி விளையாடிக் கொண்டிருந்த நகுலனை அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் (28) என்பவர், ஓரினச்  சேர்க்கைக்காக கடத்திக் கொன்று கண்மாய் பகுதியில் உடலை வீசினார். அப்பகுதி மக்களின் தொடர் மறியலுக்கு பின்னர் சிறுவனின் உடலை போலீசார் கண்டெடுத்தனர். இந்த  சம்பவம் தொடர்பாக அருள்ராஜை போக்சோ  சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து எட்டயபுரம் போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று காலையில் அருள்ராஜின் சித்தப்பா மகன் மிக்கேல்ராஜ் ஊருக்குள் அரிவாளுடன் சென்றதாகவும், இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் நகுலனின் உறவினர்கள், அருள்ராஜ், மிக்கேல்ராஜ் மற்றும் அவர்களது உறவினர்கள் வீடுகளை சேதப்படுத்தி சூறையாடினர். அங்கு நின்ற பைக் மற்றும் சைக்கிளை தீ வைத்து கொளுத்தினர். மேலும் அருள்ராஜின் சித்தப்பா ஜெபமாலை (50) என்பவரும் தாக்கப்பட்டார். காயமடைந்த அவர், எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று தூத்துக்குடி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவத்தால் எட்டயபுரத்தில் பதற்றம் நிலவுகிறது.

Related Stories:

>