×

ரயில்களில் தொடர் கொள்ளை வடமாநில வாலிபர்கள் கைது: 11 சவரன் நகை, 9 செல்போன் பறிமுதல்

ஜோலார்பேட்டை: ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரயில்களில் பயணிகள்போல் நடித்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில வாலிபர்கள் 4 பேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். கோவையை சேர்ந்த மகேஸ்வரி கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து கோவை-நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். நள்ளிரவு திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே ரயில் சிக்னலுக்காக நின்றது. அப்போது அந்த ரயிலில் வந்த மர்ம ஆசாமிகள் மகேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 2 சவரன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதேபோல், பெங்களூருவை சேர்ந்த ரோகிணிதப்பூசன் கடந்த மாதம் சென்னையில் இருந்து பெங்களூரு நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார். ரயில் அதிகாலை ஜோலார்பேட்டை அடுத்த பச்சூர் ரயில் நிலையம் அருகே வந்தபோது அவரது கழுத்திலிருந்த 3 சவரன் நகையை மர்ம ஆசாமிகள் பறித்து சென்றனர்.

மேலும், சென்னையிலிருந்து ஜோலார்பேட்டை மார்க்கமாக மைசூரு  செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பெங்களூருவை சேர்ந்த மணியிடம் 2,500 மற்றும் செல்போனை திருட்டு போனது. இதுதொடர்பாக,  ஜோலார்பேட்டை ரயில்வே எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின்பேரில், 3 தனிப்படையினர் ரயில் கொள்ளையர்களை தேடி வந்தனர். இந்த வேட்டையில், அசாம் மாநிலத்தை சேர்ந்த  தீப்ஜோதி(21), சஞ்சுராய்(26) ஆகியோரை கைது செய்தனர். இவர்களது தகவலின்பேரில் கிஷோர்(23), அமர்ஜோதிபோரா(23) ஆகியோர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 11 சவரன் நகை, 9 செல்போன்கள், 30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும், அவர்களை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Northland ,robbery , On trains, serial robbery, Northland youth, arrested
× RELATED சென்னை தாம்பரம் அருகே படப்பை பஜாரில்...