×

துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட பதவிகள் குரூப் 1 தேர்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: முதல் 8 இடங்களை பெண்கள் பிடித்து சாதனை சென்னையில் 6ம் தேதி கலந்தாய்வு

சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 பதவிக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் முதல் 8 இடங்களை பெண்கள் பிடித்து சாதனை படைத்தனர். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் அடங்கிய துணை கலெக்டர் 27, போலீஸ் டிஎஸ்பி 90, வணிக வரித்துறை உதவி ஆணையர்-18. கூட்டுறவு சங்கம் துணைபதிவாளர்-13, மாவட்ட பதிவாளர்-7, ஊரகவளர்ச்சி துறை உதவி இயக்குநர்-15, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்-8, தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் மாவட்ட அலுவலர்-3 இடங்கள் என 181 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டது.

தொடர்ந்து, 3 கட்டங்களாக தேர்வுகள் நடந்தப்பட்டது. அதாவது, முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முக தேர்வு என நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு வரை மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடைபெற்றது.
அதன் பிறகு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம் அடிப்படையில் தரவரிசைப் பட்டியலை டிஎன்பிஎஸ்சி தனது இணையதளத்தில் வெளியிட்டது. அதில் ஆண்களை விட பெண்களே அதிக அளவில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக முதல் 8 இடங்களில் பெண்கள் தான் இடம் பெற்றுள்ளனர். அர்ச்சனா என்ற மாணவி முதல் இடத்தையும், யுரேகா 2வது இடத்தையும், 3வது இடத்தை தனலட்சுமி, 4வது இடத்தை மகாலட்சுமி, 5வது இடத்தை அஜிதா பேகம், 6வது இடத்தை ஜெயா ராஜா பவுலின், 7வது இடத்தை ரூபினா, 8வது இடத்தை லோக நாயகியும் பிடித்தனர்.

இதுகுறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: முதன்மைத் தேர்விலிருந்து தேர்ச்சி பெற்ற 363 மாணவர்களுக்குக்காண நேர்காணல் தேர்வானது கடந்த 23ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இறுதி முடிவானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியிலிருந்து 54க்கும் மேற்பட்டோர் வெற்றி பெற்றுள்ளனர். அஜிதா பேகம் 5வது இடத்தையும், 19வது இடத்தை வினோத்குமார், 21வது இடத்தை
எம்.அரவிந்த், 24வது இடத்தை எஸ்.தரணியும் பிடித்துள்ளனர். தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் குரூப் 1 பதவிகளுக்கான கலந்தாய்வு சென்னையில் வரும் ஜனவரி 6ம் தேதி நடைபெற உள்ளது. இதில் ேதர்ச்சி பெற்றவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். அதன் பின்னர், அவர்கள் பணியில் சேர்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Deputy Collector ,incumbents ,Police DSP ,places ,Group 1 Selection Rankings ,women ,Chennai ,Inspector of Police DSP , Deputy Collector, Inspector of Police DSP, Positions Group 1 Examination, Rank List, Publication
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...