×

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக 3242 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது: 441 ஏரிகளில் ஒரு சொட்டு கூட நீர் இல்லை

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக 3242 ஏரிகள் முழு கொள்ளள வை எட்டியுள்ளது. அதே நேரத்தில் 441 ஏரிகளில் ஒரு சொட்டுகூட நீர் இல்லை என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக குடிநீர் மற்றும் பாசன தேவைகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் 15 அணைகளின் நீர் மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது. இருப்பினும் தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14098 ஏரிகளில் எதிர்பார்த்த அளவு நீர் மட்டம் உயரவில்லை என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் 3242 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இதில் 91 -99% வரை 1129 ஏரிகள் நிரம்பி உள்ளது.

இவற்றில், 81 முதல் 90 சதவீதம் வரை கன்னியாகுமரியில் 244, மதுரையில் 95, புதுக்கோட்டையில் 58, தஞ்சாவூரில் 82, நெல்லையில் 35, கிருஷ்ணகிரி 95, ராமநாதபுரத்தில் 129 என மொத்தம் 747 ஏரிகளிலும், 71 முதல் 80 சதவீதம் காஞ்சிபுரம் 330 ஏரிகளில், கன்னியாகுமரி 240, மதுரையில் 130, நெல்லையில் 123, திருவள்ளூர் 117 என 1272 ஏரிகள் நிரம்பியுள்ளது. அதேபோல் 51 முதல் 70 சதவீதம் வரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் 200, கன்னியாகுமரியில் 536, சிவகங்கை 216, திருவள்ளூர் 138, திருவண்ணாமலை 197, விழுப்புரம் 126 என மொத்தம் 2194 ஏரிகளிலும், 1 முதல் 25 சதவீதம் வரை மதுரையில் 212, புதுக்கோட்டை 256, சிவகங்கை 346, நெல்லையில் 107, திருவண்ணாமலையில் 218, வேலூரில் 306, விழுப்புரத்தில் 287, விருதுநகரில் 130 என மொத்தம் 2426 ஏரிகளிலும் நீர் இருப்பு உள்ளது. மதுரை மாவட்டத்தில் 150 ஏரிகளிலும், திண்டுக்கல்லில் 53, நாமக்கல்லில் 30, சிவகங்கை மாவட்டத்தில் 41, சேலத்தில் 107 ஏரிகளில் 25, திருப்பூரில் 23, வேலூரில் 87, ஈரோட்டில் 7, கோவையில் 4, திருவள்ளூரில் 2, விருதுநகரில் 2 என மொத்தம் 441 ஏரிகளில் ஒரு சொட்டு நீர் கூட இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரி தெரிவித்தார்.


Tags : lakes ,Tamil Nadu , In Tamil Nadu, northeast monsoon, 3242 lakes have reached full capacity
× RELATED புழல் ஏரி உபநீர் மதகு அருகே ரூ.9 கோடி...