×

கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? திருக்கோவிலூர் பகுதியில் நீர் நிலை ஆக்கிரமிப்பால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் முக்கிய பகுதியாக திருக்கோவிலூர் உள்ளது. இங்கு பிரசித்திபெற்ற உலகளந்த பெருமாள் கோயில், வீரட்டானேஸ்வரர் கோயில், இரட்டை வினாயகர் கோயில் உள்ளது. மேலும் சங்ககால புலவர் கபிலர்  தனது வாழ்க்கையின் கடைசி காலக்கட்டத்தில் திருக்கோவிலூர் பகுதியில் வசித்து தென்பெண்ணையாற்றின் கரை ஓரமாக உயிர் நீத்த காரணத்தால் கபிலர் குன்று அவர் நினைவாக அமைக்கப்பட்டது. இதன் விளைவாக தற்போது இந்து அறநிலையத்துறை சார்பில் நினைவு தூண் அமைக்க ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சாவூர் மன்னன் ராஜராஜ சோழன் தனது  குழந்தை பருவத்தில் திருக்கோவிலூரில் வளர்ந்தாக புராணங்களும், கல்வெட்டும் சிவன் கோயிலில் உள்ளது. இவ்வளவு புகழ் உடைய இந்த திருக்கோவிலூரில் நீர்நிலைகளை பராமரிக்காமல் அலட்சியமாக பேரூராட்சி நிர்வாகம் உள்ளதால் நீர் நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியாக உள்ளது. திருக்கோவிலூர் பகுதியில் பத்து குளங்கள்: திருக்கோவிலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில்  உலகளந்த பெருமாள் கோயிலின் அருகே 0.45 ஏக்கர் பரப்பளவில் தீர்த்த குளம், பெரிய கோபுரத்தின் பக்கத்தில் 2.30 ஏக்கர் பரப்பளவில் தெப்பகுளம், சந்தப்பேட்டையில் கனகனந்தல் சாலையில் 1.17 ஏக்கர் பரப்பளவில் நல்லதண்ணி குளம், தனலட்சுமி திரையரங்கம் அருகில் 137 ஏக்கர் பரப்பளவில் செட்டிகுளம், சந்தப்பேட்டையில் 1.15 ஏக்கர் பரப்பளவில் பாக்கு திண்ணாகுளம்,  உப்புகுளம்,  காவேரி சந்து அருகில் ஒரு குளம்,  சந்தப்பேட்டை தனியார் பள்ளி பின்புறம்  ஒரு குளம், பைபாஸ் சாலையில் ஒரு குளம் உள்ளிட்ட பத்து குளங்கள் உள்ளது. ஆனால் பொதுமக்களுக்கு தெரிந்தது தெப்பகுளம், நல்லதன்னி குளம், தீர்த்தகுளம் ஆகிய மூன்று குளங்கள் மட்டுமே என்பது வேதனைக்குரியதாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கோயில்கள் நிறைந்த திருக்கோவிலூர் பகுதியில் பத்து குளங்கள், ஒரு பெரிய ஏரி, சித்தேரி  உள்ளிட்ட நீர்நிலைகள் இருந்தும் பேரூராட்சி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ குடிமராமத்து பணிகள் மூலம்  நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரப்பட்டு  நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் குளங்களை பாதுகாக்க இன்றுவரை எந்த நடவடிக்கை  எடுக்காமல் உள்ளதால் தமிழக அரசு அறிவித்த எந்த திட்டங்களும் இந்த பகுதியில் செயல்படுத்தப்படாமல் உள்ளது. அதற்கு எண்ண காரணம் என தெரியவில்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். திருக்கோவிலூக்கு மத்திய பகுதியில் பெரிய கோபுரத்தின் அருகில் உள்ள தெப்பகுளத்தை சீரமைக்க கோயில் நகர புரதான திட்டத்தின் கீழ் கடந்த 2015 வருடம் ரூ.40 லட்சம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கி சில மாதங்களில் கைவிடப்பட்டதால் இன்று வரை தெப்பகுளம் முட்புதர்கள் வளர்ந்து   காடுபோல் காட்சியளிக்கிறது. திருக்கோவிலூர் பகுதியில் உள்ள குளங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளதாலும், சில குளங்கள் அங்கு இருந்ததற்கு எந்த அத்தாட்சியும் இல்லாத அளவிற்கு மண் கொட்டி மூடி உள்ளனர். திருக்கோவிலூர் பகுதியில் கடநத இருபது வருடமாக எந்த குளங்களும் தூர்வாரப்படாமலும், முறையாக நீர்நிலைகளை பராமரிக்காமல் உள்ளதால் இந்த பகுதியில் நீர்மட்டம் சராசரியாக சுமார் 350 அடிக்கு கீழ் உள்ளது. ஆகையால் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள குளங்களை  சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குடிமராமத்து பணிகள் மூலம் முறையாக தூர்வாரப்பட்டு நீர்நிலைகளை பாதுகாக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருக்கோவிலூர் பகுதி பொதுமக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.‘மக்கள் நலனில் அக்கறையில்லை’காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன் கூறும்போது, திருக்கோவிலூர்  பேரூராட்சி பகுதியில் எந்த குளங்களும்  பேரூராட்சி துறை மூலம் இதுவரை பராமரிக்கப்படாமலும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமலும் உள்ளது. மேலும் சித்தேரியான் வாய்க்கால் மூலம் சுமார் 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பயன்பெற்று வந்தது. ஆனால் இன்று கழிவு நீர்வாய்க்காலாக மாறியுள்ளது மிகுந்த வேதனையளிக்கிறது. அதிமுக அரசு குடிமராமத்து பணி பெயரளவில் மட்டுமே நடக்கிறது. எனவே பொதுமக்களின் நலனில் கொஞ்சம்கூட அக்கறை காட்டவில்லை என கூறினார்.‘குளத்திற்கு தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும்’வக்கீல் ராதாகிருஷ்ணன் கூறும்போது, திருக்கோவிலூர் பகுதியில் கடந்த நாற்பது வருடமாக வசித்து வருகிறேன். இங்கு நகரின் மத்தியில்  தெப்பகுளம் எனும் குளம் உள்ளது. இந்த குளத்திற்கு  பெரிய ஏரி மூலமாக செட்டியார் தெரு வழியாக  பெரிய வாய்க்கால் மூலமாக நீர் வரும் பாதை இருந்தது.  சிலர் அந்த கால்வாயை ஆக்கிரமிப்பு செய்து கட்டிங்கள் கட்டியுள்ளதால் தெப்பகுளத்திற்கு நீர்  வரும் பாதை  மூடப்பட்டுள்ளது. ஆகையால் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு  ஆக்கிரமிப்புகளை அகற்றி  குளத்திற்கு  தண்ணீர் வர ஏற்பாடு செய்ய வேண்டும் என கூறினார். …

The post கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா? திருக்கோவிலூர் பகுதியில் நீர் நிலை ஆக்கிரமிப்பால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Tirkovilur ,Thirukovilur ,Kallakkurichi district ,Worldwide Perumal Temple ,Veerataneswarar Temple ,Double Vizagar ,Dinakaran ,
× RELATED கிணற்றில் மூழ்கி அக்காள், தம்பி உயிரிழப்பு..!!